தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3வது ரயில் பாதை அமைக்கும் பணி, ரூ.256 கோடி செலவில் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் -  கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி -  தாம்பரம் என மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மேலும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் இணைத்து வண்டலூர் பகுதியில் சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து, நேற்று காலை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதையில் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டம் முதலில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், பின்னர் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், தொடர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கி பார்க்கப்பட்டது.சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றவுடன் விரைவில் இந்த பாதையில் மின்சார ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதன் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு அடிக்கடி மின்சார ரயில் இயக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: