குடும்பம் நடத்த வராததால் கணவன் ஆத்திரம் தலையில் கல்லை போட்டு மனைவி கொடூர கொலை

சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (22). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரத்தை சேர்ந்த கொத்தனார் சுப்பிரமணியன் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு, சஞ்சய் (3) என்ற மகன் உள்ளான். சுப்பிரமணியன், வடபழனியில் வேலை செய்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மது அருந்தி அழித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், கனிமொழியை விட அவரது கணவர் 13 வயது மூத்தவர் என்பதால், அவருடன் வாழ பிடிக்காமல், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். கனிமொழி, ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு சென்ற சுப்பிரமணியன், தன்னுடன் சேர்ந்து வாழ மனைவியை அழைத்துள்ளார். அதற்கு கனிமொழி, ‘சென்னையில் வீடு இல்லாத உன்னுடன் எப்படி குடும்பம் நடத்துவது. நடைபாதையிலா வசிக்க முடியும். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை குடித்தே அழிக்கும் உனக்கு எதற்கு பொண்டாட்டி,’ என்று கடுமையாக பேசியுள்ளார். இதனால், சுப்பிரமணியன் ஆத்திரமடைந்து, அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் மீண்டும் மாமனார் வீட்டிற்கு போதையில் வந்த சுப்பிரமணியன், மனைவியை குடும்பம் நடத்த மீண்டும் அழைத்துள்ளார். அதற்கு அவர், ‘குடித்து விட்டு வந்து நள்ளிரவில் தகராறு செய்கிறாயா. மரியாதையாக இங்கிருந்து போ’ என திட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுப்பிரமணியன், வீட்டுக்குள் நைசாக சென்று, அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மனைவி கனிமொழியின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கனிமொழி துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து வந்த ஐஸ்அவுஸ் போலீசார், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>