143வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு கட்சி தலைவர்கள் மரியாதை

சென்னை:  தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவபடத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், நாஞ்சில் சம்பத், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.    மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 தேமுதிக சார்பில், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பெரியார் உருவ படத்துக்கு, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமமுக சார்பில், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கலந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>