முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என்று நீதிபதி ஹேமலதா அறிவித்து தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.

 இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி நிர்மல்குமாரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார் இதையடுத்து, மூன்றாவது நீதிபதியான நிர்மல்குமார் முன்பு தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜேந்திர பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2 நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வந்தால் அந்த வழக்கை 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் என்றும், மூன்றாவதாக தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது.

 லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு  சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதுவரை விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories:

>