தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.தமிழகத்தின் 14வது ஆளுநராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017 அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அவர், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பு வகிக்க பன்வாரிலால் புரோகித் கடந்த 15ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சண்டிகருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் முலம் நேற்று முன்தினம் இரவு 8.18 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை வந்த புதிய ஆளுநருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து 12 மோட்டார் சைக்கிளில் போலீசார் அவரை அணிவகுத்து சென்னை, கிண்டி ராஜ்பவனுக்கு அழைத்து சென்றனர். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

புதிய ஆளுநரின் வாழ்க்கை குறிப்பு

பீகார் மாநிலம், பாட்னாவில் பிறந்த ஆர்.என்.ரவி 1974ம் ஆண்டில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்றார். பத்திரிகை துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, 1976ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து கேரள மாநில பிரிவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றினார். மத்திய புலனாய்வு பிரிவில் பணியாற்றியபோது, நாட்டில் கனிமவள மாபியாக்கள் உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு எதிராக துணிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான இந்திய அரசின் உளவுத்துறையில் (ஐபி) பணியாற்றியபோது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பெரிய அளவில் காணப்பட்ட வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றினார். பல தீவிரவாத குழுக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வழி வகுத்தார்.2012ம் ஆண்டு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தேசிய நாளிதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆர்.என்.ரவி நாகாலாந்தின் ஆளுநராக 1.8.2019 முதல் 15.9.2021 வரை பொறுப்பு வகித்தார். இந்திய குடியரசு தலைவரால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அவர் பொறுப்பு ஏற்க உள்ளார்.

Related Stories: