எடப்பாடியுடன் எல்.முருகன் திடீர் சந்திப்பு உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுக-பாஜ கூட்டணி: கூடுதல் இடம் கேட்டு அழுத்தம்

சென்னை:  பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜ. தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் ‘75 இன்ச் அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டி.வி.’ நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொது செயலாளர் கரு.நாகராஜன், வர்த்தக பிரிவு துணை தலைவர் சி.ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  விழாவில் தொடுதிரை டிஜிட்டல் டி.வி.யின் செயல்பாட்டை அண்ணாமலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக கவர்னராக பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவிக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் கிடையாது. எதிர்கட்சிகள் புரிதல் இல்லாமல் அவரை திரும்ப பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். கே.எஸ்.அழகிரி போன்ற தலைவர்கள் அவரது செயல்பாட்டை பார்த்து அவர்களுடைய மனசு மாறும் என்று நினைக்கிறேன். மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுகவுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம்.

சுமுகமான முறையில் கூட்டணி இடபங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழகத்தில் பா.ஜ. காலூன்றி விட்டது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பா.ஜ.. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். பாஜவின் கூட்டணி அதிமுகவுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரேகட்டமாக நடத்துவதே பாஜவின் நிலைப்பாடு.இவ்வாறு அவர் கூறினார்.அதிமுக கூட்டணியில் பாஜ தொடர்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.  

அப்போது 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான இட பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாஜ தரப்பில் இருந்து தேர்தல் நடைபெறக்கூடிய திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டங்களில் அதிக இடங்களை ஒதுக்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில் பாஜவிற்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும், எனவே கூடுதல் இடங்களை ஒதுக்கி தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. அதிமுக தரப்பில் இருந்து கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்தியதால் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் இடங்களை ஒதுக்கி தருவதாகவும், அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி தருவதாகவும் எடப்பாடி தரப்பில் கூறியதாக தெரிகிறது. இருந்தபோதிலும் எவ்வளவு இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: