மத்தளம்பாறை பகுதியில் யானைகள் தொடர் அட்டகாசம்: பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் கவலை

தென்காசி: தென்காசி அடுத்த மத்தளம்பாறை பகுதியில் காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. தென்காசி அடுத்த மத்தளம்பாறை செண்பகராமபேரி குளம் பாசன பகுதியில் தென்னை, வாழை, கப்பை கிழங்கு மற்றும் தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக சுமார் நான்கு யானைகள் கூட்டமாக சுற்றித் திரிவதுடன், விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. நேற்றிரவும் யானைகள் கூட்டமாக வந்து முப்புடாதி, சிவபெருமான், சந்தானமுத்து, மாரியப்பன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், யானைகள் கூட்டமாக நடமாடுவதால் விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை பராமரிக்க இயலாத சூழல் உள்ளது. பகல் வேளைகளிலும் யானைகள் நடமாட்டம் உள்ளது. இரவு வேளைகளில் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, வாழை உள்ளிட்டவற்றை வேருடன் பிடுங்கி சேதப்படுத்துகிறது. இதுகுறித்து வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்து விட்டோம். வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு சென்று விடுகின்றனர்.

யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் பயிர்கள் சேதம் அதிகரித்து வருகிறது. மின்சாரவேலி அமைப்பதுடன்  அகழி தோண்டி யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>