கொரோனா பாதித்த பெண்களை துரத்தும் பிரச்னைகள்; ஆள விடுங்க சாமி... இப்போதைக்கு குழந்தை வேண்டாம்!- நியூயார்க் பல்கலை. - ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: மாதவிடாய் சிக்கல், உயர் அழுத்த பிரச்னைகளால், கொரோனா பாதித்த பெண்கள் கருத்தரித்தலை தவிர்த்து வருவதாக நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல், ஐசிஎம்ஆரும் கர்ப்பிணிகள் தொடர்பான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஜமா’ நெட்வொர்க் ஜர்னலில், ‘கொரோனா தொற்று பரவல் அச்சத்தால், மீண்டும் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் (கருத்தரித்தல்) திட்டத்தை பெண்கள் தள்ளி வைத்துள்ளனர். நியூயார்க் நகரில் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் எடுத்த கருத்துக் கணிப்பில், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தொற்றுநோய் பரவலுக்கு முன்னர் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், மீண்டும் கருத்தரித்தல் திட்டத்தை தவிர்த்துள்ளனர். குறிப்பாக இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதற்கு காரணம், அவர்கள் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தபோக்கு, உயர் ரத்த அழுத்த பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் கருத்தரித்தலில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக புகார்கள் இல்லை’ என்று கூறப்பட்டள்ளது. இதுகுறித்து, தொற்றுநோயியல் நிபுணரும் முன்னணி ஆராய்ச்சியாளருமான டாக்டர் லிண்டா கான் கூறுகையில், ‘தொற்றுநோய்க்கு மத்தியில் கருத்தரிப்பால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெண்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரிப்பதால் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்தானது. மருத்துவமனைகளிலும் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பெண்கள் கருத்தரித்தலை தவிர்க்கிறார்கள். இது சிறந்த முடிவு’ என்றார். மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 19 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் குழந்தை பிறப்புக்குப் பிந்தைய பெண்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கொரோனா முதல் அலையின் போது (மார்ச் 2020 முதல் ஜனவரி 2021) சேகரிக்கப்பட்ட 4,203 கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, ‘கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெறுவதற்கு முன் பல சிக்கல்களை எதிர்கொண்டனர்.

அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் இருந்தன. 77 கருக்கலைப்பு நடந்துள்ளது. 3,213 குழந்தைகள் பிறந்தன. 534 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 382 பெண்களுக்கு (72%) லேசான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். 112 பெண்கள் (21%) மிதமாகவும், 40 பெண்கள் கடுமையாகவும் பாதிக்கப்பட்டனர். 528 பெண்களுக்கு முன்கூட்டிய பிரசவம் நடந்தது. 328 பேருக்கு உயர் ரத்த அழுத்த கோளாறு ஏற்பட்டதால் சிக்கலான பிரசவ சூழலை எதிர்கொண்டனர்.

158 கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர், தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 152 பேர் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்களின் கொரோனா இறப்பு விகிதம் 0.8 சதவீதமாக இருந்தது. எனவே, கொரோனா தொற்றானது கர்ப்பிணிப் பெண்களை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரத்த சோகை, காசநோய், நீரிழிவு போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்ட கர்ப்பமான பெண்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் இறப்பு அபாயத்தை எதிர்கொண்டனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>