சிறை கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 19ல் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தனர். இவ்வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசாரும், பின்னர் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், போலீசார் முத்துராஜ், செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை ஆகியோரை போலீசார் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், ‘கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளவர்களின் காவல் காலத்தை நீடிக்க உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்ற காவலில் உள்ள ரகுகணேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘நீதிமன்ற காவல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.  

அதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட அவசர கால மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீதிமன்றக் காவலில் உள்ள சிறைக் கைதிகளை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையில்லை. சிறையில் இருந்தவாறே காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் முறையிடலாம்’ எனக்கூறி மனுவை முடித்துவைத்தனர். இதே கோரிக்கை கொண்ட ரிட் மனுவை கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: