அதிமுக ஆட்சியால் செயல்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்த கழிப்பறைகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் ஒன்றிய பொதுநிதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வருகிறது. அவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, கண்டமனூர், கோம்பைத்தொழு, வருசநாடு உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடங்களுக்கு தற்போது வரை தண்ணீர் வசதிகள் செய்து கொடுப்படவில்லை. இதனால் கட்டப்பட்ட அனைத்து கழிப்பறை கட்டிடங்களும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது.

இதனால் அரசின் நிதி அதிக அளவில் வீணாகியுள்ளது. கடமலைக்குண்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனையடுத்து கடந்தாண்டு அந்த பகுதியில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கழிப்பறை பயன்பாட்டிற்கு வராததால் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையே அனைத்து கிராமங்களிலும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஒன்றிய பொதுநிதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>