×

தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் ரூ17,141 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் மு.க.ஸ்டாலின் காணொலி உரை

சென்னை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35  நிறுவனங்களுடன் ரூ.17,141 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது என உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது:ஐஐடிக்கள் நமது வளர்ச்சியில் பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றியுள்ளன. அதிலும் சென்னை ஐஐடி, தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசுக்கு உறுதுணையாய் இருந்துள்ளது.

அந்த வகையில் பெருமைவாய்ந்த ஐஐடியின் இத்தகைய தொழில்நுட்ப நிகழ்வில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன்மூலம் ஒரு ட்ரிலியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிப்பதுடன், தொழில்வளர்ச்சிமிக்க மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு உள்ளது. ஐடி துறையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

அதாவது, நாட்டின் மொத்த ஐடி துறை சார்ந்த ஏற்றுமதிகளில் 10% தமிழ்நாட்டினுடையதாகும். கடலடி கேபிள்கள் தமிழ்நாட்டில் வரப்போவதால் தகவல் தரவு மையங்களும், காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் பசுமை மின் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற உள்ளதாலும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஏற்ற இடமாக இருக்கும். தொழில்நுட்பக் கல்வி முடித்த பட்டதாரிகளும் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் இந்நிறுவனங்களுக்குத் தேவையான திறன்மிகு பணியாளர்களும் எளிதில் கிடைப்பார்கள். இத்தகைய வளமும் வாய்ப்பும், முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தகுதிப்படுத்தியுள்ளது.

மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இத்தகைய சூழலால் புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்குவதில் எப்போதுமே தமிழ்நாடு அரசு முன்னோடியாக இருந்து வருகிறது. கலைஞர்  1997ம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார். பள்ளிப் பாடத்திட்டத்தில் மட்டுமின்றி  கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்வி பாடத்திட்டங்களிலும் கணினிப் பாடத்தைக் கொண்டு வந்தார்.

தகவல் தொழில்நுட்பத்தில் இன்றைய சாதனை, கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும். ஐ.டி. துறையினர் திறமையானவர்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் ஏராளமான அறிவியல், தொழில்நுட்ப  பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சென்னை ஐஐடி, திருச்சி என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

அதேபோல், நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது. உலகத் தரத்திலான பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பை இது அங்குப் பணிபுரிவோர்க்கு ஏற்படுத்தித் தருகிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் ரூ.17,141 கோடி  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.

இதனால் 55,000 புதிய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என்பதை முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் நிறுவனத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : MK Stalin ,Technology Conference , Rs 17,141 crore Memorandum of Understanding with 35 companies in IT and other sectors: MK Stalin's video address at the opening of the Technology Conference
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...