மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு..!!

டெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் 10% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஒன்றிய அரசுத் தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இடஒதுக்கீடு பின்பற்ற முடியாது என்பதால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்றி 10% இடஒதுக்கீடு மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் 10% இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே திமுக கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Related Stories: