பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு

சென்னை: பிரபல கவிஞரும், எழுத்தாளருமான பிரான்சிஸ் கிருபா நேற்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாளர், கவிஞர் பிரான்சிஸ் கிருபா. தமிழ் நவீன கவிதை எழுத்தாளராக இலக்கிய உலகில் அறியப்படும் பிரான்சிஸ் கிருபா நேற்று இரவு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், கன்னி என்ற நாவலையும் எழுதியுள்ள இவர் பள்ளிப்படிப்பை மட்டுமே பயின்றவர்.

சுந்தரராமசாமி விருது, சுஜாதா விருது, மீரா விருது உள்ளிட்ட விருதுகள் இவரின் எழுத்து பணிக்காக வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர், காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது. கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள், திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சடங்கிற்காக இவரது உடல் சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு இன்று அதிகாலை எடுத்து செல்லப்பட்டது. அப்போது எழுத்தாளர்கள், வாசகர்கள் இவரின் கவிதைகளை பாடி, அஞ்சலி செலுத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: