5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்று திரும்பிய படகுகளில் மீன்பாடு அதிகரிப்பு

ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று திரும்பிய படகுகளில் அதிகளவில் மீன்வரத்து இருந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றின் வேகம் குறைந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்றுகாலை ராமேஸ்வரம் திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் அதிகளவில் மீன்வரத்து இருந்தது.

பெரும்பாலும் சீலா, பாறை. சிரையா, முரல், நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிளவில் பிடிபட்டு இருந்தது. படகில் இருந்த மீன்களை கூடைகளில் நிரப்பிய மீனவர்கள் துறைமுக ஜெட்டி பாலத்தில் விற்பனைக்கு வைத்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கை கடற்படை பிரச்னை, டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு போன்ற காரனத்தினால் குறைந்த அளவு படகுகளே கடலுக்கு சென்று திரும்பிய நிலையில் பெரிய படகுகள் கடலுக்கு செல்லாமல் கரை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்று அதிகளவில் மீன்வரத்துடன் திரும்பியதால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மேலும் அதிகளவில் படகுகள் கடலுக்கு சென்று திரும்பிய நிலையில் ராமேஸ்வரம் துறைமுகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: