அரக்கோணம் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.4.50 லட்சம் பணம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் வசதிக்காக ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் ஆனது அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் காவலாளிகளோ, சிசிடிவி கேமராவோ கிடையாது. கடந்த 15ஆம் தேதி இந்த ஏடிஎம் மையத்தில் சுமார் ரூ.8.50 லட்சம் பணத்தை தனியார் நிறுவனத்தினர் வைத்துள்ளனர். மாணவர்கள் ஏடிஎம்மில் தொடர்ந்து பணம் எடுத்ததின் காரணமாக ரூ.4.50லட்சம் வரை எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நேற்று நள்ளிரவு வெல்டிங் இயந்திரத்தை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக வெல்டிங் செய்து துளையிட்டு ஏடிஎம் இயந்திரத்தை வெளியே எடுத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். காவலாளிகளோ, சிசிடிவி கேமராவோ இல்லாததால் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அரக்கோணம் கிராமிய காவல்துறை ஆய்வாளர் தலைமையிலான குழு தற்போது அந்த இடத்தில் விசாரணை நடத்துகின்றனர். அருகில் ஏதேனும் சிசிடிவி கேமரா செயல்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் தனியார் நிறுவனங்கள் ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மறுப்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது சுமார் ரூ.4.50 லட்சம் பணம் கொள்ளை போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>