நாடு முழுவதும் கொரோனா காலத்திலும் குறையாத குற்றங்கள்: சைபர் குற்றங்கள், கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு

டெல்லி: 2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்தில் நாடு முழுவதும் விபத்து வரதட்சணை மரணம் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன. அதேநேரத்தில் கொலை, குடும்ப தகராறு, சைபர் குற்றங்கள், கள்ள நோட்டு புழக்கம், சுற்றுச்சூழல் கேடு போன்றவை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020ஆம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவது கடந்த 2020ஆம் ஆண்டு 66,01,285 குற்றங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த 51,56,158 குற்றங்களை காட்டிலும் 28 சதவிகிதம் அதிகம் ஆகும். ஒரு லட்சம் பேருக்கு 385.5ஆக இருந்த குற்ற விகிதம் 487.8ஆக உயர்ந்துள்ளது. கொரோனா முதல் அலை காரணமாக நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு பொது போக்குவரத்து குறைந்த அளவே இருந்தது. இந்த காலகட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவையும் குறைந்துள்ளன.

கொரோனா நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெருநகரங்கள் வரிசையில் சென்னையில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் உள்ளூர் சிறப்பு சட்டத்தின் கீழ் அதிகப்படியான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளள்ன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 29,193 கொலைகள் நடந்துள்ளன. 2019ல் இந்த எண்ணிக்கை 28,915ஆக இருந்தது. அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 3,339 பேரும், பீகாரில் 3,095 பேரும் மஹாராஷ்டிராவில் 2,229 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானிலும் அதிகப்படியானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1,741 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குடும்ப தகராறு, வங்கி மோசடிகள், சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. 2020ஆம் ஆண்டு 50,035 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. கள்ளநோட்டு புழக்கமும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் 8,34,947 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.92.18 கோடியாகும். நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் கொரோனா காலத்தில் 130.5 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழல் தொடர்பாக 61,767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 78.1 சதவிகிதம் அதிகரிப்பாகும். ஊழல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 3, 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,740 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 431 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 312 பேர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories: