தெலங்கானாவில் பலாத்காரம் செய்து 6 வயது சிறுமியை கொன்ற வாலிபர் ரயிலில் பாய்ந்தார்

திருமலை: ஐதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிங்கிரேனி  காலனியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 6ம் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜூ (30) என்பவர் வாலிபர், சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். சிறுமி காணாமல் போனது பற்றி விசாரித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ராஜூ வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, சிறுமியின் சடலம் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தலைமறைவான ராஜூவை 3 ஆயிரம் போலீசார் மாநிலம் முழுவதும் தேடினர். அவனை பிடித்தாலும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று மாநிலம் முழுவதும் மக்கள் ஆவேசத்துடன் வலியுறுத்தினர்.

இந்நிலையில், வாரங்கல் ரயில் நிலையம் உள்ள ராஜாராம் கிராமம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டனர். அந்த சடலத்தின் கையில் தெலுங்கு, ஆங்கிலத்தில் ‘மவுனிகா’  என்று பச்சை குத்தப்பட்டிருந்தது, ராஜூவை பிடிக்க போலீசார் வெளியிட்ட அடையாளங்களில் இதுவும் ஒன்று. போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்த ராஜூ, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான் என விசாரணையில் தெரிந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவனை பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு தரப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்து இருந்தது.

ஷர்மிளா கைது

கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்எஸ்.ஷர்மிளா, நேற்று முன்தினம் இரவு சிங்கரேனி காலனியில் கால வரையற்ற போராட்டம் நடத்தினார். அதை கைவிடும்படி போலீசார் அவரை அறிவுறுத்தினர். ஆனால், தொண்டர்களுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், நள்ளிரவில்  போலீசார் அவரை கைது செய்தனர். சிறுமியின் குடும்பத்துக்கு தெலங்கானா அரசு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்து இருந்தது. இதை சிறுமியின் குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

Related Stories: