ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரலாற்று சாதனை சாதாரண மக்கள் 4 பேர் விண்வெளியில் சுற்றுலா: வெற்றிகரமாக சென்றது விண்கலம்

புளோரிடா:  விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல் பயணமாக, அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜாரெட்  ஐசக்மேன் உட்பட 4 பேர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம்  வெற்றிகரமாக விண்வெளி  சென்றனர்.விண்வெளிக்கு வர்த்தக ரீதியான சுற்றுலாவை நடத்துவதில், எலான் மஸ்க் (ஸ்பேஸ் எக்ஸ்), ரிச்சர்ட் பிரான்சன் (வெர்ஜின் கேலக்டிக்ஸ்) ஜெப் பெசோஸ்  (புளு அரிஜன்) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரும் கடந்த மாதம் அடுத்தடுத்து தங்களின் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பினர்.இந்நிலையில், விண்வெளிக்கு முதல்முறையாக வர்த்தக ரீதியாக சுற்றுலா அழைத்து செல்வதில் ஸ்பேஸ் எக்ஸ் முந்தியுள்ளது.

இந்த நிறுவனத்தின் ‘டிராகன் கேப்சூல்’ விண்கலத்தின் மூலம்,  அமெரிக்காவின் ‘ஷிப்ட் 4 பேமன்ஸ்’ நிறுவனத்தின் தலைவரும், மிகப்பெரிய கோடீஸ்வரருமான ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 பேர், நேற்று முன்தினம் அதிகாலை விண்வெளிக்கு பயணம் சென்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள  கேப் கானவெரல் விண்வெளி தளத்தில் இருந்து ‘டிராகன் கேப்சூல்’ விண்கலம் புறப்பட்டு சென்றது. இது, முழு முழுக்க தானியங்கி  முறையில் செயல்படக் கூடியது. இதில்  சென்றவர்களில் 2 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். அனைவரும் சாதாரண மக்கள். தொழில் முறையிலான விண்வெளி வீரர்கள் கிடையாது. இதன் மூலம், சாதாரண மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய முதல் நிறுவனம் என்ற வரலாற்று பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

* இந்த பயணத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயரிடப்பட்டுள்ளது.

* இதில் சென்றுள்ள பெண்களில் ஒருவரான ஹேலே அர்சசெனக்ஸ் (29), குழந்தை பருவத்தில் இருந்தே எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

* மற்றொருவர் பெயர் கிறிஸ் செம்ரோஸ்கி (42), வாஷிங்டனில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக உள்ளார்.  அடுத்தவர் பெயர் சியான் பிராக்டர் (51). அரிசோனா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் பணியாற்றுகிறார்.

* இவர்கள் சென்றுள்ள விண்கலம், பூமியில் இருந்து 575 கிமீ  உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு, பூமியை சுற்றி வருகிறது. அங்கிருந்து பூமியின் அழகை இவர்கள் ரசிக்கின்றனர்.

* இந்த சுற்றுலாவின் மொத்த காலம் 3 நாட்கள். அதன் பிறகு, இவர்கள் பூமிக்கு திரும்புவார்கள்.

* இந்த சுற்றுலா பயணத்துக்கான முழு பணத்தையும் ஐசக்மேன் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அது எவ்வளவு தொகை என்பது வெளியிடப்படவில்லை.

* சுற்றுலா சென்றுள்ள 4 பேரும் சாதாரண மக்கள்தான் என்றாலும், 9 மாதங்களுக்கு விண்வெளி பயணத்துக்கான ஆயத்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>