அரசு நிதியுதவிக்காக காத்திருந்தபோது இன்ப அதிர்ச்சி சிறுவர்கள் வங்கி கணக்கில் திடீரென வந்த 906 கோடி: தங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா என ஏங்கிய கிராம மக்கள்

பாட்னா: பீகாரில் 6ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.906 கோடி பணம் போடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீகாரில் அடிக்கடி பல அதிசயங்கள் நடக்கின்றன. ஏழைகளின் வங்கி கணக்குகளில் திடீர் திடீரென பல லட்சம் ரூபாய் வந்து விழுகிறது. கதிஹர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆசிஷ் மற்றும் குரு சரண் விஸ்வாஸ். பள்ளி சீருடை, படிப்பு செலவுக்காக அரசு அளிக்கும் நிதியதவியை பெறுவதற்காக, தங்களின் கிராமத்தில் உள்ள உத்தர பிரதேச கிராமிய வங்கியில் கணக்கு வைத்திருந்தனர். அந்த நிதியுதவி தொகை வந்து விட்டதா என பார்ப்பதற்காக, இவர்கள் நேற்று முன்தினம் பெற்றோருடன் அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றனர்.

அதில் அவர்கள் தங்களின் வங்கி கணக்கு இருப்பை பார்த்ததும் மயக்கம் அடையாத குறைதான். ஆசிஷின் கணக்கில் ரூ.6.2 கோடியும், குரு சரண் கணக்கில் ரூ.900 கோடியும் பணம் இருப்பதாக காட்டியது.  இது பற்றி கேள்விப்பட்டதும் கிராம மக்கள் அனைவரும், தங்களின் கணக்கிலும் இப்படி கோடிக் கணக்கில் பணம் வந்துள்ளதா என பார்ப்பதற்காக  ஏடிஎம் மையத்தை சூழ்ந்தனர்.இது பற்றி கதிஹர் மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ரா கூறுகையில், ‘‘வங்கியின் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களின் வங்கி கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக கணக்கு காட்டுகிறதே தவிர, உண்மையில் அவர்களின் கணக்கில் அந்த பணம் இல்லை,’’ என்றார். இந்த சம்பவம், பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories:

>