திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு வாங்க, அளிக்க வந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் விநியோகம் மற்றும் தாக்கல்  கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக, விசிக உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பெற வந்தனர். அவர்களுடன் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இருந்தனர். இதனால், திருப்போரூர் பஸ் நிலையம், ரவுண்டானா, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓஎம்ஆர் சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கிமீ தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன. 2ம் நாளான நேற்று திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வேட்பாளர்களுடன்  ஏராளமானோர் திரண்டு வந்ததால் அப்பகுதியே திணறியது. இதனால், திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கின. இதையடுத்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதற்கிடையில், திருப்போரூர் ஒன்றிய அளவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், நேற்று தங்களது விருப்ப மனுவை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசனிடம்  அளித்தனர்.  இதில், 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்போது, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>