நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்து சுருட்டினர் பாஜ ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ வெளிநாட்டில் 600 கோடி முதலீடு

* பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை

* ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தகவல்

மதுரை: நிதி நிறுவன மோசடியில் சுருட்டிய ரூ.600 கோடியை பாஜவை சேர்ந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரிப்பதாகவும் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், நகர் காலனியைச் சேர்ந்தவர்கள் கணேஷ், சுவாமிநாதன். சகோதரர்களான இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். பாஜவைச் சேர்ந்த இருவரும் அடிக்கடி ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால், ‘‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’’ என அழைக்கப்பட்டனர். இவர்களது நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.600 கோடி வரை மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கணேஷ், சுவாமிநாதன், மேலாளர் காந்தன், கணக்காளர் மீரா, ராம், கணேஷின் மனைவி அகிலா (எ) அகிலாண்டம், அலுவலக பணியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இவ்வழக்கில் கைதாகி சிறையிலுள்ள அகிலா (எ) அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘நிதி நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.600 கோடி வரை மோசடி நடந்துள்ளது. முறைகேட்டில் கிடைத்த பணத்தை கொண்டு கணேஷின் மனைவி அகிலாண்டம் பெயரில் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். சுமார் ரூ.551 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் அகிலாண்டம் நிர்வாக பொறுப்பில் உள்ளார். எனவே இவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும்’’ என கூறப்பட்டது.

இந்த நிறுவனத்தில் ரூ.16 கோடி வரை முதலீடு செய்த முகம்மது யூசுப் என்பவர் தரப்பில் அகிலாண்டத்திற்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘இதுவரை 41 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்களின் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. அகிலாண்டத்தின் பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும். எனவே, அகிலாண்டத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும், அலுவலக உதவியாளர் வெங்கடேசன் ஜாமீன் மனு அனுமதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>