பெண் எஸ்பி.க்கு முத்தம் ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு 23ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி:  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் எஸ்பி.யை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐஜி முருகன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம், தமிழக காவல் துறையில் கடந்த 2019ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தெலுங்கானா போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து அன்றைய அதிமுக அரசும், ஐஜி முருகனும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘வழக்கை தெலங்கானா போலீசுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது.

இதே போல், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், ‘இந்த வழக்கை வெளிமாநில அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும். ,’ என்று கூறப்பட்டது. அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த 2019, செப்டம்பர் 24ம் தேதி இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது.    இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிமன்றம், வரும் 23ம் தேதி வழக்கை விசாரிப்பதாக நேற்று உத்தரவிட்டது.

Related Stories: