இன்னும் 4 சாட்சிகள் மட்டுமே பாக்கி ஜெயலலிதா மரணம் பற்றி ஒரு மாதத்தில் அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் உறுதி

புதுடெல்லி: ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் 4 சாட்சிகளிடம் மட்டுமே  விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விசாரணையின் அறிக்கை, ஒரு மாதத்தில் அளிக்கப்படும்,’ என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலமுறை  சம்மன் அனுப்பப்பட்டும், அவர் இதுவரையில் ஆஜராகவில்லை.  இந்த ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

 இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவமனை செய்துள்ள மேல்முறையீட்டு மனு, நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால்  விரைந்து விசாரிக்க வேண்டும்,’ என மருத்துவமனை தரப்பு வலியுறுத்தப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ‘‘ஜெயலாலிதா மரணம் தொடர்பாக இன்னும் 4 சாட்சியங்களிடம் மட்டுமே விசாரிக்கப்படாமல் இருக்கிறது. இந்த விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,’ என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வரும் 23ம் தேதிக்கு  நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய தினம், இந்த ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால  தடையை நீக்கும்படி முந்தைய அதிமுக அரசு தாக்கல்  செய்த மனுவும் இணைத்து விசாரிக்கப்பட உள்ளது.

Related Stories: