பூபேந்திர படேல் அமைச்சரவையில் எல்லாமே புதிய முகம் குஜராத்தில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு: ரூபானி அணியில் ஒருவருக்கு கூட பதவியில்லை

காந்திநகர்: குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ அரசில், 24 புதிய அமைச்சர்கள், புதிய முகங்களாக நேற்று பதவியேற்றனர். முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் ஒருவருக்கு கூட இதில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குஜராத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதன் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருடைய அமைச்சரவை கலைக்கப்பட்டது. புதிய முதல்வர் பதவிக்கு ஒன்றிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா உட்பட பலரின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் முதல்முறையாக எம்எல்ஏ.வான பூபேந்திர படேல் (59) கடந்த திங்களன்று முதல்வராக பதவியேற்றார்.

இவருடைய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கடைசி நிமிடத்தில் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், புதிய அமைச்சர்களாக 24 பேர் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் அனைவருமே புது முகங்கள். விஜய் ரூபானி அரசில்  இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் ஒருவருக்கு கூட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. .

நேற்று பதவியேற்ற 24 பேரில் 10 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 14 பேருக்கு இணையமைச்சர்கள் அந்தஸ்தும், 5 பேருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, பாஜ முன்னாள் மாநில தலைவர் ஜித்து வகானி, ருஷி கேஸ்டேல், பர்னேஷ் மோடி, ராகவ்ஜி படேல், கனுபாய் தேசாய், கிரிட்சின் ராணா, நரேஷ் படேல், பிரதீப் பர்மார், அர்ஜுன் சிங் சவுகான், முகேஷ் படேல், நிமிஷா சுதார், அரவிந்த் ரேயானி, குபேர் தின்தோர், கீர்ாத்திசின் வகேலா, கஜேந்திரசின் பார்மர், ஆர்.சி. மக்வானா, வினோத் மோரோடியா, தேவமலாம் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.

* குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடப்பதால், அமைச்சரவை முழுவதும் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* மூத்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை தேர்தல் பணி, கட்சிப் பணிகளில் களமிறக்கப்பட உள்ளனர்.  

எஸ்சி, எஸ்டி.க்கு அதிக இடம்

* படிதார் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேலுக்கு முதல்வராக வாய்ப்பு அளித்துள்ள பாஜ, படேல் சமூகத்தினர் 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளது.

* இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தலா ஒன்று, பழங்குடியின வகுப்பினருக்கு 4, எஸ்.சி வகுப்பினருக்கு 3, உயர் வகுப்பினருக்கு தலா இரண்டு, ஜெயின் சமூகத்தினருக்கு ஒன்று என்று அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் இல்லை

குஜராத் பாஜ அரசில் கடந்த 2016ல் இருந்து நிதின் படேல் துணை முதல்வராக இருந்து வந்தார். ரூபானிக்கு அடுத்தப்படியாக இவருக்குதான் முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு அந்த பதவியும் கிடைக்கவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட அரசிலும் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.

இலாகா ஒதுக்கீடு

குஜராத்தில் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர் பூபேந்திர படேல்,  உள்துறை, நகர வளர்ச்சி, பொது நிர்வாகம், தொழிற்சாலை, கனிமம், முதலீடு திட்டங்கள், வீட்டு வசதி, துறைமுகம் ஆகிய துறைகளை ஏற்றுள்ளார். கன்னுபாய் தேசாய்க்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதர அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

Related Stories: