பள்ளி மாணவன் சடலமாக மீட்ட வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தது அம்பலம்: கள்ளக்காதலன் கைது; சிறுவனுக்கு வலை

புழல்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், சிறுவனை கொலை செய்து கோயில் குளத்தில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் துர்கா (35). இவரது கணவர் காமராஜ் என்ற செல்வம் (40). துர்கா தனது கணவருடன் சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கத்தில் வசிக்கிறார். இவர்களது மகன் தனசேகர் (எ) சூர்யா (14). தாத்தா வீட்டில் தங்கி, கவரைப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 11ம் தேதி, சிறுவன் தனசேகர், திடீரென மாயமானான். அவனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

இதுகுறித்து, கோவிந்தசாமி கடந்த 13ம் தேதி சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுவனை தேடி வந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தனசேகரை, பைக்கில் கடத்தி சென்று, திருப்பாலீஸ்வரர் கோயில் அருகே, மறைவான இடத்தில் சரமாரியாக அடித்து, உதைத்து, கொலை செய்து, அக்கோயில் குளத்தில் சடலத்தை வீசியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து, கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர். அதில், துர்காவும், கோபாலகிருஷ்ணனும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இதனால், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில், கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா, கோபாலகிருஷ்ணனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதை சிறுவன் தனசேகர் பார்த்துவிட்டான். இதுபற்றி தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறுவதாக தெரிவித்துள்ளான். இதனால் பயந்துபோன துர்கா, கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மகனை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 11ம் தேதி கோபாலகிருஷ்ணன், தனது நண்பன் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, வீட்டின் அருகே இருந்த சிறுவன் தனசேகரனை, பைக்கில் அழைத்து சென்று, கொலை செய்து திருப்பாலீஸ்வரர் கோயில் குளத்தில் சடலத்தை வீசியதாக வாக்குமூலம் அளித்தார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து, துர்கா மற்றும் கோபாலகிருஷ்ணனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், துர்காவை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து, கோபாலகிருஷ்ணனை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். தலைமறைவான சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: