சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: எம்பி, எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார்

பொன்னேரி: சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில், அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் தரப்பில், எம்பி, எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்தனர். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் நேற்று ரயில்வே அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு நடத்தினர். அத்திப்பட்டு ரயில் நிலையத்தில், பயணிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, ரயில் பயணிகள் தரப்பில், குறித்த நேரத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதில்லை, குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் செய்யவில்லை என புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த கழிப்பறைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு, கழிப்பறையில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எம்பி, எம்எல்ஏ ஆகியோர் அதிகாரிகளை கண்டித்தனர். ‘‘ஆய்வு பணிகளுக்கு வருவதால் பெயரளவுக்கு கழிப்பறையை திறந்து வைத்து, எங்களை முட்டாளாக்க பார்க்கிறீர்களா. உடனடியாக கழிப்பறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், பொன்னேரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்த மக்கள், ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.

பின்னர், எம்பி ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில்,  அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை ஆகியவை இல்லை. அதனை உடனடியாக செய்ய ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 2 நாட்கள் இந்த தொடர் ஆய்வு நடத்தப்படும். பின்னர், ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவோம். அதன்பிறகு, மேம்பால பணிகள், சுரங்க பணிகள், கூடுதல் ரயில்கள் உள்ளிட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: