நீட் தேர்வு சரியாக எழுதாததால் விபரீதம் தீக்குளித்த பள்ளி மாணவி கவலைக்கிடம்: அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் நேரில் ஆறுதல்

சென்னை: நீட் தேர்வு சரியாக எழுதாததால், தேர்வு தோல்வி பயத்தில் தீக்குளித்த பள்ளி மாணவி,  உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிபா அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகள் அனுசுயா(17).  சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு முடித்துவிட்டு, முதல்முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் கேள்விகள் கடுமையாக இருந்ததால், சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்ற பதற்றத்திலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் தனியறையில் இருந்த அனுசுயா, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தீயை அணைத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு 45 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்த செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி ரீனா நேரில் சென்று, மாணவியிடம் வாக்குமுலம் பெற்றார்.

இந்நிலையில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமிமதுசூதனன், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று,மாணவி மற்றும் அவரது பெற்றோர்ரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை டீன் முத்துகுமாரிடம் கேட்டறிந்தனர். மாணவியின் பெற்றோரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தார். நீட் தேர்வு பயத்தில் மாணவி தீ குளித்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: