நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதை போன்று கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயம்: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 20 % உயர்வு; நகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கு 5 % உயர்வு

சென்னை: புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான மதிப்பு நிர்ணயம் செய்யும் வகையில், ‘புதிய வழிகாட்டி மதிப்பு’ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், கடந்தாண்டை காட்டிலும் சென்னையில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு 20 சதவீதமும், தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளில் 5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவின்போது கட்டிடங்கள், நிலங்களுக்கு என தனித்தனியாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

இதில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டு அதன்படி பத்திரப்பதிவு நடந்து வருகிறது. அதேநேரத்தில் கட்டிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த கட்டிடங்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று இருந்தால், சார்பதிவாளர்கள் மூலமும் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அந்த கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது கட்டிடங்களின் புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்து பதிவுத்துறைக்கு அறிக்கையாக பொதுப்பணித்துறை அனுப்பி வைத்துள்ளது. அதன்பேரில் இனி சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டு, அந்த கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, கான்கிரீட்கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.9,765, முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.9050, இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.9215, அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.139 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. மெட்ராஸ் டெரர்ஸ் வடிவமைப்பு பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,930, முதல் தளத்துக்கு ரூ.8,730, 2ம் தளத்திற்கு ரூ.8,515, அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.139 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம், கோவை, ஈரோடு, திருப்பூர்  மாநகராட்சிகளுக்கு 15 சதவீதமும், திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோயில், ஆவடி மாநகராட்சிகளுக்கு 10 சதவீதமும், அனைத்து நகராட்சிகளுக்கும் 5 சதவீதமும், கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி மலைப்பகுதிகளில் 10 சதவீதமும் கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கை உடனடியாக நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த மதிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் உயர்ந்தது. இந்த கட்டிட மதிப்பினை கொண்டு இனி வருஙகாலங்களில் முத்திரை தீர்வை வசூலிக்க பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த கட்டிட மதிப்பு அறிக்கையை அடிப்படையாக வைத்துதான் அரசு கட்டிடங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>