ஆசைஆசையாய் வேலை தேடி எலக்ட்ரானிக் சிட்டி வந்தவர் 13 நாளிலேயே வாழ்க்கையை தொலைத்த சென்னை பெண்: பெங்களூரு மேம்பாலத்தில் நடந்தது என்ன?

சென்னை: சென்னை பெண்ணின் கனவை தகர்த்தது பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சாலை விபத்து. 13 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூரு வந்தவர், வேலைக்கு சேர்ந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கசந்திரா  மேம்பாலத்தில் உள்ள லே - பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிருத்திகா  (28) என்ற பெண் தனது நண்பரான ப்ரீத்தம் குமார் (30) என்பவருடன் பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இவர்களின் பைக் மீது மோதியது. இதில் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட அவர்கள், 25 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் விசாரித்ததில் பலியான கிருத்திகா சென்னையை சேர்ந்தவர் என்பது உறுதியானது.

ப்ரீத்தம் குமார் (30) சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்து தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு கிருத்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பணி நிமித்தமாக ப்ரீத்தம் குமார் ஜே.பி நகரில் தனது நண்பர்களுடன் குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தார். கிருத்திகா பெங்களூருவிற்கு வருவது இதுவே முதன்முறை. 13 நாட்களுக்கு முன்பு மகாதேவபுராவில் உள்ள பிரபல எம்.என்.சி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக தனியாக வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வந்த கிருத்திகா, 2 நாட்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு கிருத்திகா பெங்களூருவை சுற்றி காண்பிக்கும்படி நண்பர் குமாரிடம் கேட்டுள்ளார். அதை ஏற்ற அவர், தனது நண்பர் ஒருவரின் சென்னை பதிவு எண் கொண்ட புல்லட் பைக்கில் அவரை அழைத்து சென்றார். எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் உள்ள லே -பையில் நின்றபடி பெங்களூருவின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். விபத்து நடப்பதற்கு முன்னதாக கிருத்திகா, நண்பர் குமாரிடம், லே-பையில் நடந்து செல்லலாம் என்று கூறியுள்ளார். அதற்கு குமார் சரி என்று கூறிவிட்டு இறங்க முயற்சிப்பதற்குள் அதிவேகத்தில் வந்த கார் இவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த நேரத்தில் பைக் ஸ்டாண்ட் போடாமல் நின்றுள்ளது. சைடு லாக் எதுவும் செய்யப்படவில்லை. இருவரும் செல்போன்களில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் விபத்து நடந்துள்ளது. 25 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் கிருத்திகாவின் கழுத்து, முதுகெலும்பு முற்றிலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. விபத்திற்கு குடிபோதை காரணமா என்று தெரியவில்லை. ஆனால், விபத்தை ஏற்படுத்தியது நிதீஸ் (23) என்ற கல்லூரி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. குடிபோதையில் இருந்தாரா என்பது மருத்துவ ஆய்வில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>