அரசாணை போடப்பட்டதால், அது நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை அரசு அறிவித்த பலன்கள் மக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சர்களும், செயலாளர்களும் இணைந்து செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர்களால் துறை சம்பந்தப்பட்ட மானிய கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களின்  செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்து துறை  செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில்  500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன வாக்குறுதிகள் என்று பிரித்து  வெளியிட்டிருக்கிறோம். இந்த அறிவிப்புகள் அனைத்தையும் படிப்படியாக நாம்  நிறைவேற்றியாக வேண்டும். ஒரு காலவரம்பிற்குள் அதை நிறைவேற்றிட வேண்டும். அமைச்சர்களை மட்டுமல்ல, ஒவ்வொரு துறை செயலாளர்களும் இந்த அறிவிப்புகளை குறித்த காலத்திற்குள் முடிக்கக்கூடிய வகையில் என்னுடைய கண்காணிப்பு இருக்கும்.

அனைத்து துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை நான் தெரிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகை ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் தகவல்களை தினமும் பார்க்கப் போகிறேன். என்னுடைய அறையிலேயே பெரிய திரை ஒன்றினை வைத்து, தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது. அறிவிப்பு தொடர்பாக அரசாணை போட்டு விட்டோம் என்பதால் அறிவிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அந்த அறிவிப்பின் பலன் மக்களை சென்றடைய வேண்டும். அப்போதுதான் நாம் அறிவிப்பை செயல்படுத்தி விட்டோம் என்று அர்த்தமாகும்.

ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்துவதற்கு கால நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அந்த காலத்துக்குள் நிறைவேற்றுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்ததுதான் இந்தஅரசு. எனவே, இணைந்து செயல்படுங்கள். இணைந்து செயல்படுவதன் மூலமாக வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தாருங்கள். திட்டங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளில், சிறுசிறு காரணங்களுக்காக மற்றொரு துறை தாமதம் ஏற்படுத்திவிடும். அது திட்டச் செயல்பாட்டில் தேக்கநிலையை ஏற்படுத்துவதோடு, நிதி செலவினத்தையும் அதற்கேற்ப  குறைத்து வேறு சில நிர்வாக சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது.

எனவே, துறை செயலாளர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் உங்கள் துறையின் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு துறைகளின் திட்டங்களையும் இவை மக்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் என்ற வகையிலே அணுக வேண்டுமென்றும், அதன்மூலமாக முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும். ஒவ்வொரு துறையினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் செயலாக்கத்தினை, அவை குறித்து நான் தெரிந்துகொள்ள, வரும் அக்டோபர் மாதம் மீண்டும் ஆய்வு செய்யவிருக்கிறேன். அதற்குள்ளாக தேவையான அரசாணைகளை வெளியிட்டு பணிகளை துவக்குவதற்கான நல்ல முயற்சிகளை நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அதற்கு இந்த அரசு உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: