அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 28 இடங்களில் போலீசார் சோதனை என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இது, உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை. இந்த சலசலப்புகளுக்கு அதிமுக அடிபணியாது. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ஏனென்றால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எப்போதுமே சட்டத்தின் ஆட்சியைத்தான் தமிழகத்தில் நடத்தி வந்தனர். அவர்களை தொடர்ந்து வழிவந்த, அரசும் சட்டப்படிதான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. எனவே, இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம், வெற்றி பெறுவோம். அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories:

>