கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: கோவை மாவட்டத்தில் மால், தியேட்டர் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு தடை..! கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் மால், தியேட்டர், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா பரவல் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. தற்போது, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள்,  தவிர மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்கும். உழவர் சந்தைகளில் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. வார சந்தைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்கள் கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 82 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு சமீரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: