நீர்மூழ்கி கப்பலில் தென்கொரியா ஏவிய நிலையில் ரயிலில் இருந்து சீறிப்பாய்ந்த வடகொரிய ஏவுகணை: திகிலூட்டும் முயற்சியால் உலக நாடுகள் அதிர்ச்சி

சியோல்: தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், அதற்கு போட்டியாக ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்திய புகைப்படங்களை அந்நாடு வெளியிட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. கொரிய தீபகற்ப நாடுகளான வடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான பகைக்கு மத்தியில், கடந்த திங்கள்கிழமை வடகொரியா இரு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. சுமார் 1,500 கி.மீ. தொலைவு சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டவை. அதன் தொடர்ச்சியாக நேற்று குறுகிய தொலைவு செல்லும் மேலும் இரு ஏவுகணை மத்திய வடகொரியாவிலிருந்து ஜப்பான் கடலை நோக்கிச் செலுத்தப்பட்டன. இதற்கிடையே, அடுத்த சில மணி நேரங்களில் தென்கொரியாவும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.

இந்தச் சோதனை மூலம் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணையை செலுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள நாடுகளின் வரிசையில் 7வது நாடாக தென்கொரியா சேர்ந்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையைப் பார்வையிட்ட அதிபர் மூன் ஜே-இன், ‘வடகொரியாவின் சீண்டல்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கும் திறனைப் பெற்றுள்ளோம்’ என்றார். இரு கொரிய நாடுகளின் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் ஆயுதப் போட்டியும் பதற்றமும் மீண்டும் அதிகரித்துள்ளது. தென்கொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை படங்களை அந்நாடு வெளியிட்ட சில நிமிடங்களில், வட கொரியா உத்தியோகபூர்வமான திகிலூட்டும் படங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய முறையாக ரயிலில் இருந்து வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஜப்பானை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

மிகவும் ஆபத்தான இதுபோன்ற சோதனையானது, வெற்றிகரமாக முடிந்ததாக வட கொரிய அரசு தெரிவித்துள்ளது. ரயிலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது, ரயிலின் பின்புறத்தில் இருந்து தீ மற்றும் புகை எழும்ப வானத்தை நோக்கி ஏவுகணை பாய்கிறது. இவ்வாறாக தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்தும், வடகொரியா ரயிலில் இருந்தும் ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இருநாடுகளின் ஏவுகணை சோதனைகளை அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. வடகொரியாவின் ஆபத்தான சோதனைகளை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories: