பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் : தமிழக அரசு தகவல்!

சென்னை : தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து தமிழகஅரசு கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.இந்தச் சலுகையை பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து தமிழக அரசு கடந்த 2020-ம்ஆண்டு உத்தரவிட்டது. ஆனால்,இந்த அரசாணைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தும், அவை இன்னும் நிலுவையில் உள்ளன. மகப்பேறு விடுப்பு வழங்கப்படவில்லை. எனவே பணிவரன்முறை செய்யப்படாத தற்காலிக ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரி யிருந்தார்.இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதிக்கு அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பெண் ஊழியர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடோ, பாரபட்சமோ காட்டக்கூடாது. பணி வரன்முறைப்படுத்தப்பட்ட மற்றும் பணி வரன்முறைப்படுத்தப்படாத பெண் ஊழியர்களை சமமாகப் பாவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சம் ஏதும் காட்டுவதில்லை என தெரிவித்தார். வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் மகப்பேறு விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும், மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரித்து கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார்.தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கறிஞர் ராஜகுரு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Related Stories: