குளிர்கால கொண்டாட்டம்!

நன்றி குங்குமம் தோழி

‘மரத்தடி மகாநாடு’ என்று சொல்லுவோமே, அதே மாதிரி வீட்டின் பின்புறத் தோட்டம் அவரவர் குடும்ப மகாநாட்டிற்குத் தயாராகி விடும். யார் வீட்டிற்கு வந்தாலும் நம் வரவேற்பறை அவர்களை வரவேற்கும். ஆனால் இந்த குளிர் விட்டு சூரிய வெளிச்சம் கண்களில் பட்டாலே போதும், வருபவர்கள் பின்புறத்தைத் தேடிச்சென்று தோட்டத்தில் அமர்வதை வெகு சிறப்பாக நினைக்கிறார்கள். அதற்காகவே அங்கு அலங்கார விளக்குகள் அமைக்கப்படுகின்றன.

நிறைய வீடுகளில் முன்புறப் புல்வெளிகளில் நிரந்தரமான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. வட்ட வடிவ மேசை, நாற்காலிகள், நிழற்குடைகள் ஆகிய அனைத்தும் காணப்படுகின்றன. பின்புறத்தில் கூட தரையில் விரிப்புகள் விரித்து, அனைவரும் அமர்ந்து விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு. தரையில் அமர்வதையே யோசிக்கும் இத்தகைய காலகட்டத்தில், அனைவரும் கும்பலாக சம்மணமிட்டு அமர்ந்து, ஜாலியாகப்பேசி, சிரித்து விளையாடுவதும் நல்ல பொழுதுபோக்கு.

இப்படி இவர்கள் சந்திக்கும் போது பல விதமான விளையாட்டினை விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் ஒரு புதுமையான விளையாட்டு, வண்ணமயமான வானவில் நிறத்தை முட்டைகளின் மேல் வரைய வேண்டும். அதற்காகவே பயனற்ற வண்ணக்கலவைகள் கொண்ட பாக்கெட்டுகள் இருந்தன. முட்டைகள் போல் வண்ணமடித்த பிறகும் அதனை உணவிற்குப் பயன்படுத்துகிறார்கள். வண்ணங்கள் முட்டையின் ஓடு மேல் இருந்தாலும், அதில் இருக்கும் ரசாயனம் முட்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த வண்ணங்களில் எந்த விதமான ரசாயனக் கலவை இல்லை என்பதால் இதை உணவிற்கும் பயன்படுத்துகிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீர், மறுபக்கம் வண்ணக்குச்சிகள், ஒருபக்கம் தட்டு நிறைய முட்டைகள்.  யார் எவ்வளவு வேண்டுமானாலும் வண்ணம்அடிக்கலாமாம். நிறைய முட்டைகளுக்கு யார் வண்ணம் தீட்டி அசத்துகிறார்களோ அவர்கள்தான் விளையாட்டில் ஜெயித்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அப்படியாக அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வண்ணமடிக்கிறார்கள்.

வண்ணமடித்த முட்டைகளை வரிசையாக வானவில்லின் நிறத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துகிறார்கள். பல வண்ண நிறங்களை வரிசைப்படுத்திப் பார்க்கும் போது பார்க்க கொள்ளை அழகாக  உள்ளது. விளையாட்டும்  வினோதமாக உள்ளது. ஏரிக்கரைகளில் ‘தோணி’ கட்டுவது போல் அங்கு தரையில் விரிப்பு விரித்து, காற்று வாங்கிக்கொண்டு, உணவை ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்வதும் ஒரு இனிய பொழுதுபோக்கு. விடுமுறையைக் கழிக்க, சரியான இடம் என்பதுடன், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

குழந்தைகள் ஒருபுறம் ஓடிவிளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் படுத்து ஓய்வெடுக்க, இளைஞர்கள், ஆண், பெண் இருபாலரும் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர். சிலர் அங்கேயே உணவு சமைத்தும் சுடச்சுட சாப்பிடுகிறார்கள். பிரித்தெடுக்கும் வசதி கொண்ட சமையல் சார்ந்த அனைத்து உபகரணங்களும் கிடைப்பதால், தங்கள் வண்டியில் அனைத்தையும் எடுத்து வந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் உட்பட, அனைத்தும் கைக்குள் அடங்கும் விதம். முழுவதும் பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்ற ஒரு நோட்டு புத்தகம்.

அதை குழந்தையிடம் கொடுக்கிறார்கள். குழந்தையோ அதை நன்கு கடித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிப்புரட்டி கடித்தது. காரணம், அந்த பொருட்கள் தீங்கு விளைவிக்காத பொருட்களால் செய்யப்பட்டது. மேலும் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணப்படங்களுடன் அவற்றின் பெயரும் அத்தகைய பொருட்களின் சிறப்பும் அவர்கள் மொழியில் எழுதப்பட்டிருந்தது. எந்தப் பக்கத்தை புரட்டினாலும் அங்குள்ள படமும், அதன் பெயரும் குழந்தை மனதில் பதியும் என்பதாகச் சொல்லப்படுகிறது. ‘விளையாட்டிலேயே கல்வி’ என்பதன் சிறப்பம்சம் இது போன்ற விஷயங்கள் மூலம் புரிய ஆரம்பித்தன.

நாம் எவ்வளவு படித்திருந்தாலும், இதுபோன்ற சிறிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதில்தான் எத்தனை ஆர்வம். ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்னும் பொன்மொழிகள் நினைவுக்கு வந்தன. ஏரிக்கரைகள் போன்று, பூங்காக்கள் அருகிலுள்ள திறந்தவெளித்தோட்டம், புல்தரைகளில் குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுவதும், உண்டு மகிழ்வதும் சந்தோஷமான பொழுதுபோக்காகக் கருதி அதற்கான முன்னேற்பாடுகளை  செய்கிறார்கள். திறந்த வெளிகளில் திரைப்படங்கள் வெளியிட்டால் அதைக்கண்டு களிப்பதும் மிக்க மகிழ்ச்சி தருணமாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

நிறைய இசைக்கச்சேரிகள் திறந்த வெளிகளில் நடைபெறுகிறது. குளிர்கால சமயங்களில், காலை மற்றும் மாலை உணவுகளை வெளியே வாங்கி சாப்பிட்டுக்கொண்டு விடுமுறையை சந்தோஷமாகச் செலவழிப்பதுதான் இவர்கள் நோக்கம். வாரத்தின் ஐந்து நாட்கள் கடின உழைப்புக்குப்பின் இரண்டு நாட்கள் குடும்பத்துடன் செலவிடுவதுதான் நிம்மதி தருவதாக நினைக்கிறார்கள். வீட்டிற்குள் ‘தீ மூட்டி’ சந்தோஷப்படுவது ஒரு முக்கிய பொழுதுபோக்கு. அதே சமயம் ‘ஐஸ்’கட்டிகள் உருகி முடித்தவுடன், குப்பைகள் அகற்றப்படும். பனி மழையில் மரங்களின் கிளைகள் நிறைய முறிந்துவிழும்.

அவற்றை அள்ளி குப்பையில் போடாமல் ஒரு இடத்தில் சேகரித்து வைக்கிறார்கள். மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பதால், எல்லாருடைய வீட்டிலும் கிளை முறிந்து அதனை சேகரித்து வைப்பது வழக்கமாக உள்ளது. முறிந்த கிளைகளை தீ மூட்ட பயன்படுத்துகிறார்கள். எல்லாருடைய தோட்டத்திலும் நடுவில் பெரிய இரும்பினாலான குழி போன்று அமைக்கப்பட்டு, அதற்கான மூடியும் பொருத்தப்பட்டுள்ளது. பனிக்காலங்களில் அந்த குழி பனிக்கட்டியில் புதைந்து இருப்பதால், பனி அனைத்தும் உருகிய பிறகுதான் அங்கு அந்த குழு இருப்பதே வெளியே தெரிகிறது.

அந்த குழுக்குள் அனைத்து மரக்கிளைகளையும் போட்டு தீ மூட்டுகிறார்கள். குளிருக்கு இதமாக இருக்கிறது. பூனைக்குட்டிகள் கூட குளிரைப் போக்கிக்கொள்ள அருகில் வந்து அமர்ந்து கொள்கின்றன. ஆள் ஆளுக்கு காய்ந்த குச்சிகளையும், மரக்கிளைகளையும் ஒடித்துப் போட்டபடி அதை சுற்றி அமர்ந்து பொழுதினை கழிக்கிறார்கள். அவை முழுவதும் எரிந்தபின் சிறிது தண்ணீர் ஊற்றி அனைத்துவிட்டு மறுபடியும் மூடி போட்டு மூடிவிடுகிறார்கள். இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.

இதேபோன்று முக்கால்வாசியான தனி வீடுகளில், வரவேற்பறையில் ‘தீ மூட்ட’ இடம் அமைத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. வீடு கட்டும்பொழுதே ஹாலின் ஒரு பக்கத்தில் இதற்கான அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். மேலும் தீ எரியும் போது எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அழகிய தடுப்புகளும் அமைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. உள்ளேயே மரக்கட்டைகள் நிறைய போடப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வீடுகளில், இயற்கைத் தீ முட்டுவது போன்று ‘கேஸ்’ சிலிண்டர் கொண்டும் அமைத்திருக்கிறார்கள். விருந்தினர் வந்தால், பனி உள்ள நேரத்தில் ‘சுவிட்ச்’ போட்டு விடுகிறார்கள்.

உட்புறத்தில் கண்ணாடிக்குப்பின்புறம் அழகிய தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கிறது. எவ்வித குப்பையோ, தூசியோ எதுவுமே கிடையாது. ஒரே அளவில் அழகாக எரிகிறது. ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சுவர் முழுவதும் அழகிய தீ சுடர் விட்டு எரிவது போல் அமைத்துள்ளனர். குளிர்காலத்திற்கென இதுபோன்ற சிறப்பம்சங்கள்கூட புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த நகரத்தின் தட்ப வெப்பம் காரணமாகத்தான் என்னவோ இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

பனிக்கட்டிகள் மறைந்தவுடன், கருகிய செடிகள் வண்ணமயமாக உயிர் பெற்று எழுவது என்பது ‘புனர் ஜென்மம்’ எடுப்பதுபோல் தோன்றியது. அப்படிப்பட்ட செடி ஒன்றில் ரத்தம் கொட்டுவது போன்று பூக்கள் கொத்தாக மலர்கின்றன. அந்தப்பூவின் பெயரே ‘பிளீடிங் ஹார்ட்’ (Bleeding heart) தான். திடீரென பனிமழை, தூரல் மழை, சாரல் காற்று என்று இயற்கை நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தாலும், மனமாற்றத்திற்கும், உடல் உற்சாகத்திற்குமென பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் ஒன்றுதான் ‘மால்’ (Mall)களில் நடைபெற்று வந்த ‘பூக்கண்காட்சி’யும்.

உலகில் என்னவெல்லாம் நிறங்களில் பூக்கள் உள்ளனவோ, அத்தனையும், வருவோரை வரவேற்றன. எப்படித்தான் கடைகளில் இவ்வளவு கண்காட்சிகளை செயல்படுத்தினார்களோ என்று ஆச்சரியப்பட வைத்தது. ஒவ்வொரு கடை வாயிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, குட்டித் தோட்டமே உருவாக்கப்பட்டது. சிறிய நடைபாதைகளில், ஓரமாக பச்சைப்புல்வெளி ஏற்படுத்தி நடுநடுவே கண்ணைப் பறிக்கும் விதவிதமான பூக்கள், இதுவல்லவா சொர்க்கம் என்று சொல்லக்கூடிய வகையில் வியப்பில் ஆழ்த்தின. கொத்துக் கொத்தாக பார்ப்பதற்கு ‘ரோஜா’ போன்ற பூக்கள் அனைத்து நிறங்களிலும் காணப்பட்டன.

‘பியான்சி’ என்று சொல்லப்படும் மலரும் கொத்துக்கொத்தாகத் தொட்டியை மறைக்கும் அளவுக்கு முழுவதும் பூக்களாகவே காட்சி தருகின்றன. மிகச்சிறிய இடத்தில் எவ்வளவு அழகழகான தோட்டத்தை உருவாக்கி, இயற்கையை நேசிக்க வைத்துவிடுகிறார்கள். விதவிதமான மலர் கிரீடங்கள், பூப்பந்தல்கள் என கண்களுக்குத்தான் எத்தனை விருந்து! ‘மால்’ சென்று பொருட்களை வாங்குவதுடன், மலர்க்‘கண்காட்சி’யைக் கண்டுகளிப்பது மற்றொரு பொழுதுபோக்கு. இது மட்டுமா? நிறைய திரையரங்குகள் உள்ளேயே அடக்கம். அடுத்து நடைபாதைகளில் ‘மசாஜ்’ செய்யும் வசதியும் ஏராளம்.

காலை முதல் மாலை வரை பொழுதை கழித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் நல்ல உறக்கம்தான் வரும். இப்படியிருக்கையில், வெளியில் வெயில் இருந்தால் என்ன, பனிமழை பெய்தால்தான் என்ன? சுகமான கட்டடத்தில், வண்ண வேடிக்கைகளை பார்த்துக்கொண்டு, இதமான சூட்டில் நடைப்பயிற்சியும் சாதகம்தான்! இதற்கிடையே பனியிலிருந்து தலை தூக்கும் செடிகள், மரங்கள் மளமளவென்று துளிர் விட்டு வண்ணங்களை வாரி இறைக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் தலைகாட்டும் பசுமைப்புற்களை சரி செய்து சமப்படுத்துகிறார்கள். அதுபோல் பழைய குப்பைகளையும் அகற்றிவிடுகின்றனர்.

இதற்காக அவர்கள் ஆட்களை நியமிப்பதில்லை. காரணம் எல்லாவற்றுக்கும் தனித்தனி உபகரணம் உள்ளது. புட்களை சீரமைப்பது மட்டும் இல்லாமல், குப்பைகளை தூளாக்கவும் அனைத்திற்கும் ‘மிஷின்’ வசதியிருப்பதால், அனைவரும் தங்கள் தோட்டத்தையும், வீட்டையும் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடுகிறார்கள். முன்பக்கம் அழகிற்காக பசுமையும், வீட்டின் பின்புறம் வசதிக்காக காய்கறித் தோட்டமும், சீசனுக்கேற்ற மலரை அள்ளித்தரும் செடிகளை வளர்ப்பதன் மூலம் அவர்கள் எவ்வளவு தூரம் இயற்கையை நேசிக்கிறார்கள் என புரிகிறது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Related Stories:

>