‘நானும் ரவுடிதான்யா’ காமெடி பாணியில் கே.கே.நகரில் 19 வாகனங்களை நொறுக்கிய வாலிபர்கள் கைது

சென்னை:  சென்னை கே.கே.நகர் 10வது ஷெக்டரில் உள்ள 60, 61, 63வது தெருவில் கடந்த 13ம் தேதி நள்ளிரவு 3 ரவுடிகள் சாலையோரம்  நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டினர். இந்த சம்பவத்தில் 3 கார்கள், 6 ஆட்டோ, 10 பைக்குகள் என 19 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கே.கே.நகர்  போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று கஞ்சா போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 3 ரவுடிகளை தேடி வந்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க தி.நகர் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் (22), அவரது நண்பர் ஆதி (26) ஆகியோரை தாக்கியது தெரியவந்தது. பிறகு அவர்கள் அளித்த தகவலின்படி விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடைய கார்த்திராஜா (எ) ஆஹா கார்த்திக் (24), அரவிந்தன் (எ) பட்டாணி அரவிந்தன் (27) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கே.ேக.நகர் பகுதியில் உள்ள ரவுடிகள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

இதனால் தாங்கள் இந்த பகுதியில் ரவுடிகளாக தங்களை அடையாளம் படுத்திக்கொள்ள, வடிவேல் நடித்த சினிமா பட காமெடி போல, போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து உடைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கே.கே.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Related Stories:

>