ஒரே நாளில் அடுத்தடுத்து வட கொரியா - தென் கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

சியோல்: வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏவுகணை சோதனை செய்ததால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. கடந்தாண்டு  அமைதியாக இருந்த வடகொரியா, தற்போது அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தி கொண்டிருந்த நிலையில், ஓராண்டாக அமைதியாக இருந்த அது,   கடந்த மார்ச்சில் 2 ஏவுகணைகளை வானத்தை நோக்கி வீசி சோதனை செய்தது. மேலும், கடந்த ஞாயிறன்று  1,500 தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதற்கு, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், வடகொரியா நேற்று மேலும் 2 கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணைகளை செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்தது. மத்திய வடகொரியாவில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி இவை செலுத்தப்பட்டன. ஜப்பானின் பொருளாதார கடல் மண்டலத்துக்கு வெளியே இந்த ஏவுகணைகள் தாக்கியதாக ஜப்பான் கடலோர கடல் படை உறுதி செய்துள்ளது. இதற்கும் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியாவும் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை செய்தது.

கடந்த மாதம் தென்கொரிய கடற்படையில் சேர்க்கப்பட்ட 3 ஆயிரம் டன் எடை கொண்ட  ‘தோசன் அன் சாங்-ஹோ’ என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. வடகொரியாவும், தென்கொரியாவும் பரம எதிரிகளாக உள்ள நாடுகள். கடந்தாண்டு இவற்றுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டது. பின்னர், மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், இருநாடுகளும் ஒரேநாளில் அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்திருப்பது, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகில் முதல்முறை

* தென்கொரியா அணு ஆயுத பலமில்லாத நாடு. இப்படிப்பட்ட ஒரு நாடு, கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை செய்திருப்பது உலகில் இதுவே முதல்முறை. இந்த சோதனையை தென்கொரிய அதிபர் மூன் ஜே பார்வையிட்டார்.

* நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தும் பலத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் வடகொரியா, இந்தியா ஆகியவை மட்டுமே பெற்றுள்ளன. தற்போது, இந்த பட்டியலில் தென்கொரியாவும் சேர்ந்துள்ளது.

Related Stories:

>