ஸ்ரீபெரும்புதூர், செய்யூரில் பயங்கரம் 2 பேர் தலை துண்டித்து கொடூர கொலை: மர்ம நபர்களுக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், செய்யூரில் 2 பேர் தலை மற்றும் உடல் துண்டித்து கொடூரக் கொலை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே தர்காஸ் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம் இரவு சிதைந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. அவ்வழியாக சென்ற மக்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் காட்டு தீப்போல் பரவியதால், ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதையொட்டி அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தலையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து போலீசார், அதே பகுதியில் அவரது உடல் கிடக்கிறதா என இரவு முழுவதும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. நேற்று காலை தேவாலயத்தின் பின்புறம் தலையில்லா உடல் மட்டும் கிடந்தது. அதனை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தலை துண்டித்து சடலமாக கிடந்த வாலிபர், தாம்பரம் அருகே எருமையூரை சேர்ந்த கோதண்டம் என்பவரது மகன் வெற்றிவேல் (23). எருமையூர் பகுதியில் பிரபல ரவுடி மேத்யூவின்  கூட்டாளி என தெரிந்தது. மேலும் விசாரணையில், நேற்று முன்தினம்  காலை வெற்றிவேல், வேலை தேடி செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.  இந்தவேளையில் அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர் என தெரியவந்தது.

இதற்கிடையில், இச்சம்பவம் பற்றி அறிந்ததும் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி மணிகண்டன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த  2020 அக்டோபர் 30ம் தேதி நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக் (22), தர்காஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த  5 பேர், அவரை படுகொலை செய்தது. தற்போது  வெற்றிவேலின் தலையும் அதே இடத்தில்  மீட்கப்பட்டுள்ளது. இதனால், அபிஷேகின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக வெற்றிவேல் கொலை செய்யப்பட்டரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

செய்யூர்: சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரமேஷ் (எ) அட்டு ரமேஷ் (44). கடந்த 2019ம் ஆண்டு காசிமேடு பகுதியை சேர்ந்த சொரிகுப்பன் கொலை வழக்கில் அட்டு ரமேஷ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் அட்டு ரமேஷ், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால், செய்யூர் அருகே கடப்பாக்கம் பகுதியில் தனது மனைவியின் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து, காசிமேடு காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வருவது வழக்கம். இதையொட்டி கடந்த 11ம் தேதி காலை சென்னை செல்ல கடப்பாக்கம் பகுதியில் பஸ்சுக்காக அட்டு ரமேஷ் நின்றிருந்தார். அப்போது, சொரிகுப்பனின் கூட்டாளிகள், ஒரு காரில் வந்து, அட்டு ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அட்டு ரமேஷ் தங்கியிருந்த இடம், சொரிகுப்பனின் கூட்டாளிகளுக்கு எப்படி தெரியும் என ரமேஷின் கூட்டாளிகள் விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (38) என்பவர், தகவல் கொடுத்து, அந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நேற்று காலை கடப்பாக்கத்துக்கு அட்டு ரமேஷின் கூட்டாளிகள் சென்றனர். அங்கு, ரஞ்சித்தின் வீட்டுக்கு சென்று, மாடியில் தூங்கி கொண்டிருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது தலையை எடுத்து வந்து, அட்டு ரமேஷ் கொலையான இடத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தலையையும், உடலையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடி அட்டு ரமேஷ் கொலையான 4 நாட்களில் அவரை காட்டி கொடுத்தவரை மற்றொரு கும்பல் வெட்டி கொன்றது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கடப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 5 கொலைகள் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>