நகை திட்டங்களை கூறி பலரிடம் மோசடி பணத்தை வாங்க வந்த மக்கள் திடீர் போராட்டம்

திருத்தணி:  நகை திட்டங்களை கூறி, தனியார் நிதி நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளது. அந்த பணத்தை கொடுப்பதாக கூறி வரவழைத்து, அவர்களிடம்  பணம் பட்டுவாடா செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் சாலை திருத்தணி டிஎஸ்பி அலுவலகம் எதிரே தனியார் நிதி நிறுவனம் இயங்கியது. இங்கு பிளாட்டினம் மற்றும் 2 தங்க நகை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைதொடர்ந்து திருத்தணி, ஆர்கே பேட்டை, அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, ஆந்திரா மாநிலம் நகரி, ஏகாம்பரகுப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் வளர்புரம் குருராஜா பேட்டை உள்பட பல பகுதிகளில் ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த பகுதி மக்களிடம் நிதிகளை வசூலித்தனர்.

அதில், பிளாட்டினம் திட்டத்தில் ரூ.60 ஆயிரம் கட்டினால் வாரம் ரூ.5 ஆயிரம் வீதம் 52 வாரங்களுக்கு வழங்கப்படும். இதேபோல் 2வது திட்டத்தில் ரூ.15,900 கட்டினால் வாரம் ரூ.300 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் திட்டம் இரண்டில் அதே தொகை கட்டினால் வாரம் ரூ.500 வீதம் 52 வாரங்கள் வழங்கப்படும். இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என கூறி வசூலிக்கப்பட்டது. இதேபோல், ஸ்காலர்ஷிப் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.2500 வசூலித்து, வாரம் ரூ.300 வீதம் வழங்கப்படும்.

தங்கநகை திட்டத்தில் மாதம் ரூ.3,000  கட்டினால், ஒரு ஆண்டுக்கு பிறகு 2 சவரன் நகை வழங்கப்படும் என ஏழை எளிய மக்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டது. இதை நம்பிய ஏராளமானோர், 5 முதல் 6 திட்டங்களில் இணைத்துள்ளனர். ஆனால், அவர்களிடம் வசூலித்த பணம் 3 வாரங்கள் மட்டுமே, ஒருசிலரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டது. பலர் ஏமாற்றப்பட்டனர். இதையடுத்து பணைத்தை இழந்த மக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகே கடந்த 11ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பணத்தை மீட்டு தரும்படி கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நேற்று தனியார் நிறுவனம் நிர்வாகி ஒருவர் பணம் கட்டியவர்களுக்கு திருத்தணி மாங்காடு தனியார் மில்லில் நேற்று பணம் வழங்குவதாக, செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், தனியார் மில் முன்பு குவிந்தனர். ஆனால் பணம் பட்டுவாடா செய்ய யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: