சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி

பெர்ன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் யங் பாய்ஸ் அணி வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் செல்சியா, 1-0 என்ற கோல் கணக்கில் ஜெனிட் அணியை வீழ்த்தியது. ஐரோப்பிய நாடுகளின் 32 கிளப்கள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நேற்று துவங்கின. பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட முன்னணி நாடுகளின் புகழ் பெற்ற மைதானங்களில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன.  நேற்று ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடந்த போட்டியில் எஃப் குருப்பில் இடம் பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்த்து, அதே குரூப்பை சேர்ந்த யங் பாய்ஸ் அணி களம் இறங்கியது. மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆட்டம் துவங்கிய 13வது நிமிடத்திலேயே அசத்தலாக ஒரு ஃபீல்டு கோல் அடித்து, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 34வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் முன்கள வீரர் ஆரோன் வான் பிசாகாவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட, அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.  

இரண்டாம் பாதியில் யங் பாய்ஸ் அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தனர். 66வது நிமிடத்தில் அந்த அணியின் நடுகள வீரர் மேஸ்சக் இலியா கொடுத்த ஒரு அற்புதமான பாசை வாங்கி, மவுமி காமெலு மின்னலாக கோல் அடித்தார். வீரர்களின் காயம் காரணமாக போட்டி அவ்வவ்போது தடைபட்டதால், கூடுதலாக 5 நிமிடம் வழங்கப்பட்டது. அதில் யங் பாய்ஸ் அணியின் தியோசான் சிபாட்ச்சு ஒரு ஃபீல்டு கோல் அடித்து, 2-1 என்ற கோல் கணக்கில் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை  லண்டனில் உள்ள சாம்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில் ஹெச் குரூப்பில் இடம் பெற்றுள்ள செல்சியா-ஜெனிட் அணிகள் மோதின. இதில் நடப்பு சாம்பியனான செல்சியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரைட் விங் அஸ்பிலிகியூட்டா கிராஸ் ஷாட்டில் அனுப்பிய பந்தை, மிட்ஃபீல்டர் ரொமேலு லுகாகு, தலையால் முட்டி கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

ஸ்வீடனின் மால்மோ நகரில் நடந்த ஹெச் குரூப்பின் மற்றொரு போட்டியில் ஜுவென்டஸ் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் மால்மோ அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது. அந்த அணியின் அலெக்ஸ் சாண்ட்ரோ, பாலோ டைபாலா மற்றும் அல்வரோ மோராட்டா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த ஈ குரூப் போட்டியில் வலுவான பார்சிலோனா-பேயர்ன் அணிகள் மோதின. இதில் பேயர்ன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ராபர்ட் லெவாண்டோஸ்கி 2 கோல்களும், தாமஸ் முல்லர் ஒரு கோலும் அடித்தனர்.

Related Stories:

>