×

60 நொடியில் 6 இட்லி விழுங்கிய பாட்டி

நன்றி குங்குமம் தோழி

 வயதாகிவிட்டது காலையில் சாப்பிட்ட இட்லியே ஜீரணமாகவில்லை... எனக்கு ஒரு சோடா வாங்கிட்டு வான்னு மகனிடம் கெஞ்சும் அம்மாக்கள் மத்தியில் ஒரு பாட்டி 1 நிமிடத்தில் அலேக்காக 6 இட்லியை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளார். யார் அந்த பாட்டி? எங்கே நடந்தது இந்த சம்பவம்?

கர்நாடகா மாநிலத்தின்,  மைசூர் நகரம்  தசரா விழாவுக்கு பெயர் பெற்றது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளும் பொதுமக்களுக்கு நடத்தப்பட்டன.  பெண்களுக்காக பிரத்யேகமாக இட்லி சாப்பிடும் போட்டி  அக்டோபர் 1ம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு வயது பெண்கள் கலந்துகொண்டனர்.

போட்டியில் 1 நிமிடத்திற்குள் அதிக இட்லியை விழுங்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று குறிப்பிட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் போட்டியில் பங்கு பெறுபவர்கள் இட்லி சாப்பிடும் போது தண்ணீர் அருந்தக்கூடாது என்பது மட்டும் தான் விதிமுறையாக கூறியிருந்தனர். இட்லி சாப்பிடுவதற்காக பல பெண்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் ஒரு பெரிய டேபிளில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இட்லியுடன், சாம்பாரும் பரிமாறப்பட்டது. விழா ஏற்பாட்டாளர்கள், போட்டி தொடங்கி சரியாக ஒரு நிமிடம் ஆனதும், போட்டியாளர்கள் சாப்பிடுவதை நிறுத்தச்சொன்னார்கள். பலர் தட்டில் வைக்கப்பட்டிருந்த இட்லிகள் அப்படியே மீதமிருந்தன. என்னிடமா மோதுகிறாய் என இளம்பெண்கள் பலர் போட்டி போட்டு சாப்பிட்ட நிலையில் 60 வயதான மூதாட்டி ஒருவர் கண்ணை மூடி விழிக்கும் முன் தட்டில் இருந்த இட்லிகளை அனைத்தும் விழுங்கி ஏப்பம் விட்டிருந்தார். அந்த பாட்டி பெயர் சரோஜம்மா.

மைசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த பாட்டிதான் 6 இட்லிகளை 60 நொடிகளில் விழுங்கினார். நடிகர் சூரி புரோட்டா சாப்பிடும் போட்டியில் 50 புரோட்டாக்களை சாப்பிட்டு வெற்றி பெற்றதும் அவரை திணற செய்யும் நோக்கில் கடைக்காரர் இல்ல 45 தான் சாப்பிட்ட என கூறுவது போல் ‘‘இன்னும் எத்தனை இட்லி வேணும்னாலும் வையுங்க அப்படியே சாப்பிடுவேன்’’ என்றார் போட்டியில் வெற்றி பெற்ற புன்னகையுடன்.

வயசானவங்க இவங்க எல்லாம் என்ன சாப்பிட்டு பரிசு வாங்கப்போறாங்கன்னு ஏளன பார்வை பார்த்த இளம் பெண்கள் மத்தியில் வெற்றிக்கோப்பையை தட்டி சென்றார் சரோஜம்மா. ஓல்டு இஸ் கோல்டு என்பது உண்மையாகிவிட்டது. இப்போதெல்லாம் அந்த பாட்டியை சும்மா கூட சாப்பிடு பாட்டி என்று  உறவினர்கள் சொல்வதில்லையாம்.

கோமதி பாஸ்கரன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!