×

எதிர்காலத்தை மாற்றிய ஐஸ்குச்சிகள் !

நன்றி குங்குமம் தோழி

மரத்தால் செய்யப்படும் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவை என்றுமே பழமை மாறாமல் இருப்பது தான் அதன் சிறப்பு. மரத்தினால் பெரிய பெரிய கலை பொருட்கள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. சாதாரண குச்சியைக் கொண்டு கூட அதில் பல கலை வண்ணங்களை உருவாக்கலாம். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சந்திரனும் ஐஸ் குச்சிகளை கொண்டு அழகிய கலை பொருட்களை வடிவமைத்து வருகிறார்.

சந்திரன் மாற்றுத்திறனாளி. இவருக்கு ஒரு வயது இருக்கும் போது, போலியோ பாதிப்பு ஏற்பட்டது. அது அவரின் கால்களை முற்றிலும் செயல்படாமல் பாதித்தது. மேலும் அவரின் வலது கையும் செயலிழந்தது. ஒரு வயதில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புடன் போராடி தன் மகனின் கைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார் சந்திரனின் தாயார் செல்லம்மா. அவரின் விடா முயற்சியால், முற்றிலும் பாதிப்படைந்த அவரின் வலது கரத்தின் மூன்று விரல்களை தவிர மற்றவை தற்போது இயங்கி வருகிறது.

‘‘போலியோ பாதிப்பால் என்னால் நடக்க முடியாது. எனக்கு எல்லாமே அம்மா தான். ஐந்தாம் வகுப்பு வரை என்னை அம்மா தான் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு போவாங்க. அது வரை நான் சின்ன பையன் என்பதால் அவங்களால என்னை சுமக்க முடிந்தது. அதன் பிறகு அவங்களால என்னை தூக்கிக் கொண்டு போக முடியல. அப்ப என்னுடன் படித்த என் நண்பன் சத்யா தான் எனக்காக உதவி செய்தான். அவன் பள்ளிக்கு சைக்கிளில் போவான். தினமும் என் வீட்டுக்கு வந்து அவன் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து செல்வான்.  

மேல் தளத்தில் உள்ள என் வகுப்புக்கு செல்ல பள்ளி நண்பர்கள் உதவி செய்வார்கள். இப்படியே பத்தாம் வகுப்பு வரை படித்து, தேர்ச்சி பெற்றேன். இதன் பிறகு அம்மாவிற்கு நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு சேர்ந்தேன்’’ என்றவர் தன் சகோதரரின் குழந்தைக்காக ஐஸ்குச்சியில் பென்சில் பாக்ஸ் செய்து கொடுத்துள்ளார். ‘‘என்னோட மோட்டிவேஷன், இன்ஸ்பிரேஷன் எல்லாமே என் அண்ணன் மற்றும் தம்பி பசங்க தான். அவங்க தான் நான் எப்ப துவண்டு விழுந்தாலும் எனக்கு ஒரு ஊன்றுகோலா இருக்காங்க. ஒரு முறை என் அண்ணன் மகன் பென்சில் பாக்ஸ் வேணும்ன்னு கேட்டான்.

அந்த சமயத்தில் அவனுக்கு புதுசா ஏதாவது செய்து கொடுக்கலாம்ன்னு வீட்டில் சும்மா இருந்த ஐஸ்குச்சிகளை கொண்டு ஒரு பென்சில் பாக்ஸ் ரெடி செய்தேன். இப்படி விளையாட்டாக ஆரம்பிச்சது இந்த பத்து வருடத்தில் என்னுடைய முழு நேர வேலையாகவே மாறிவிட்டது’’ என்றவர் ஐஸ்குச்சிகளைக் கொண்டு இதுவரை 250க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை தயாரித்துள்ளார். “பத்தாம் வகுப்பை முடிச்ச கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஐந்தாண்டு வேலைப் பார்த்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அந்த வேலையில் ஈடுபடமுடியவில்லை. அதனால் வேலையை ராஜினாமா செய்தேன்.

ஒரு பக்கம் வேலை  செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். என்னுடைய நேரத்தை என் சகோதரரின் பசங்களுக்காக செலவு செய்ய ஆரம்பிச்சேன். அவங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, விளையாடுவது என்று என்னையே நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். என்னதான் முகத்தில் சிரிப்பு வெளிப்பட்டாலும், எனக்குள் உள்ளூர ஒரு பயம் இருந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறோம். மத்தவங்களுக்கு பாரமா இருந்திடுவேனோன்னு அச்சம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் பசங்களுக்காக ஐஸ் குச்சிகளில் பென்சில் பாக்ஸ் செய்து கொடுத்தேன்.

நான் செய்வதை பார்த்தவர்கள் அடுத்து பேனா ஸ்டாண்ட் வேணும்ன்னு சொல்ல... இப்படியாக பத்து வருடம் முன்பு ஆரம்பித்தது தான் என்னுடைய ஐஸ் ஸ்டிக் குச்சி கலைகள். எனக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு ஐஸ் ஸ்டிக் குச்சிகளில் பல பொருட்கள் செய்து இருக்கேன். கடந்த ஆண்டு ஒரு யுடியூப் சேனலில் இது குறித்து பேசிய போது, அவர்கள் மூலம் நான் தான் உலகின் முதல் ஐஸ் ஸ்டிக் கலைஞர் என்று தெரியவந்தது’’ என்ற சந்திரனை தொடர்ந்தார் அவரின் தாயார் செல்லம்மா.  “ஒரு வயசு வரை நல்லாதான் இருந்தான். ஒரு முறை அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டரிடம் போன போது தான் தெரிந்தது அவனுக்கு இளம்பிள்ளை வாதம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது.

அதனால் அவனுக்கு கால்களும் கையும் செயல் இழந்து போகும் என்று டாக்டர் சொன்ன போது, நான் ஒரு நிமிடம் ஆடிப்போனேன். அதே சமயம் முயற்சி செய்தால், கண்டிப்பாக வலது கையை மட்டும் இயக்க செய்யலாம் என்று அவர் வாக்குறுதி கொடுத்தார். அந்த காலத்தில் போலியோவிற்கு தடுப்பூசியோ, சொட்டு மருந்தோ இல்லை. அதே சமயம் என் மகனை நான் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஓங்கி இருந்தது. எப்படியாவது அவனுடைய கையை குணமாக்க வேண்டும் என்று நான் என்னால் முடிந்த முயற்சியில் ஈடுபட்டேன். தினமும் அவனுக்கு பிசியோதெரபி கொடுத்து வந்தேன். என்னுடைய உழைப்பு வீண் போகவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வலது கை செயல்பட ஆரம்பிச்சது. ஆனால் மூன்று விரல்கள் மட்டும் ஒத்துழைக்க மறுத்துவிட்டது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், இவன் இவ்வளவு கலைப் பொருட்களை செய்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார் செல்லம்மா.
“குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுப் பொருட்களையுமே ஐஸ்குச்சியில் செய்யலாம். இப்போது நம் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கும் அனைத்து பொம்மைகளுமே பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை.

இதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி நமக்கு தெரியும். அதனால் அடுத்த தலைமுறைக்காவது பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றினை அறிமுகப்படுத்தி பொறுப்பாக வளர்ப்போம். ஒரு பொருளைச் செய்ய ஒரு வாரம் முதல் இரண்டு அல்லது நான்கு மாதம் கூட ஆகும்’’ என்ற சந்திரன் ஐஸ் குச்சியில் பல கலைப் பொருட்களை செய்து கின்னஸ் சாதனைப் படைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!