×

கொல்கத்தாவும் துர்கா பந்தலும்!

நன்றி குங்குமம் தோழி

மேற்குவங்காளத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை துர்கா பூஜா. இதனை துர்கோத்சவம் மற்றும் சரத் உற்சவம் எனவும் அழைப்பர். வங்கதேசத்தில் இதனை பகவதி பூஜா என்றும் நேபாளத்தில் ‘தசியன்’ என்று கொண்டாடுகிறார்கள். மேற்குவங்காளம், அஸ்ஸாம், திரிபுரா, ஒடிசா, பீகார் உட்பட பல மாநிலங்களில், நாம் நவராத்திரி கொண்டாடும்போது, வங்காளிகள் அங்கு அதனை துர்கா பூஜையாக கொண்டாடுவது வழக்கம்.

பத்து நாட்கள் இங்கு விமர்சையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையினை அவர்கள் அங்கு சஷ்டியில் ஆரம்பித்து தசமி வரை நான்கு நாட்கள் மட்டுமே கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் நான்கு முதல் எட்டாம் தேதிவரை கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் முடிவில் துர்கையினை கங்கையில் கரைத்துவிடுவது அவர்களின் வழக்கம்.

துர்கா பூஜையின் பின்னணி?

துர்கா தேவி இந்த நான்கு நாட்கள் அம்மா வீட்டிற்கு வருவதால், அவள் வருகையை சிறப்பாக கொண்டாடுவதை தான் துர்கா பூஜை என்கிறார்கள்.
எருமை முக மகிஷாசுர அரக்கனின் அட்டகாசம் தாங்க இயலாத நிலை வந்தபோது, பார்வதி, துர்கை வடிவம் எடுத்து, மகிஷாசுரனை ெகால்கிறாள். இதனால் மகிஷாசுரமர்த்தினி என்ற புதுப்பெயரையும் பெறுகிறாள்.

தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் மகிஷா சுரமர்த்தினிக்கும் ஒரு சந்நதி உண்டு. நவராத்திரியின் போது, இந்த மகிஷாசுரமர்த்தினிக்கு 9 நாட்களும் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்து, பிரசாதங்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். மேற்கு வங்காளத்தில், மகிஷாசுரனை துர்கை கொன்றதை தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு, பூஜைகள், பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.கொல்கத்தாவில் மட்டும் 2000க்கும் அதிகமான துர்கா பந்தல்கள் உண்டு. இந்த பந்தல்களில் பொதுவாக துர்கை, சரஸ்வதி, லட்சுமி, சிவன், கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். சில சமயம் குறிப்பிட்ட தீம்களிலும் பந்தல்களும் அமைக்கப்படும்.

உதாரணமாக, பாகுபலி படத்தின் அரண்மனை செட்டை அப்படியே தத்ரூபமாக அமைத்து அதனுள் துர்கை வீற்றிருப்பாள். மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, ஆலமரத்தின் அடியில் துர்கா வீற்றிருப்பது என ஒவ்வொரு பந்தலும் வித்தியாசமாக இருக்கும். 2015ம் ஆண்டு கல்கத்தா தாஷ்பிரியா பூங்காவில் 88 அடி உயர பிரம்மாண்ட துர்கா சிலைநிறுவப்பட்டு இருந்தது.

இந்த துர்கா பந்தல்கள் மாலை நேரத்தில் பல வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதனை தரிசிக்கவே மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இவற்றை தரிசிக்க தனி சுற்றுலா வசதியும் உண்டு.

வெளியூர்வாசிகள், வெளிநாட்டினர் இதனை காணவே வருவது வழக்கம். நான்கு தினங்கள் கொல்கத்தா விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் பார்வையாளர்களை மகிழ்விக்க பந்தல்கள் நெடுக்க பலவிதமான உணவுகளும் விற்பனைக்கு இருக்கும். ெகால்கத்தாவில் குறைந்தது 200 வீடுகளில், 500 வருடங்களாக துர்கா பூஜை நடந்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. துர்கா பூஜா அன்று பெண்கள், வீட்டில் தேவி மகாத்மியம் படித்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

- ராஜி ராதா, பெங்களூரூ.

Tags : Kolkata ,Durga Bandal ,
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?