×

ஆஸ்காரை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுமி!

நன்றி குங்குமம் தோழி

சென்னையை அடுத்த மாமல்லபுரம்.  தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் ஸ்கேட்டிங் பலகையுடன் புறப்பட்டு விடுகிறார் 9 வயது சிறுமி கமலி. இங்குள்ள தார்சாலைதான் இவருக்கு ஸ்கேட்டிங் மைதானம். மீன் விற்று பிழைப்பு நடத்தும் ஏழை சுகந்தியின் மகள் தான் கமலி. தனியாளாய் தனது மகளின் ஸ்கேட்டிங் ஆசையை புரிந்துகொண்டு உறவினர் ஒருவர் கமலிக்கு வாங்கித் தந்த ஸ்கேட்டிங் பலகை தான் கமலியை ஆஸ்கர் விருது வரை கொண்டு சென்றுள்ளது.

கடந்த  மே மாதம் ஆவணப் படம் தயாரிப்பதற்காக இந்தியா வந்த இங்கிலாந்தை சேர்ந்த சாஷா எடுத்த  வீடியோ தான் இப்போது கமலியை ஆஸ்கர் விருது வரை அழைத்து சென்றுள்ளது.சாஷா ‘ரெயின்போ’ என்ற குறும்பட இயக்குனர், மாமல்லபுரம் வந்திருந்தவர், கமலியின் விளையாட்டுப் பயிற்சி, குடும்பம், வாழ்க்கைச் சூழல் குறித்து, ‘கமலி’ என்ற பெயரில், ஆவண குறும்படம் தயாரித்தார்.

மும்பையில் கடந்த மே மாதம் நடந்த சர்வதேச குறும்பட விழா மற்றும் அட்லாண்டா திரைப்பட விழாக்களில், சிறந்த குறும்பட இயக்குனர் விருதை, சாஷா இப்படம் மூலம் பெற்றார். 2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கும் இப்படம் தகுதி பெற்றுள்ளது.

இது குறித்து கமலி கூறும்போது, ‘‘படிப்பில், ஸ்கேட்டிங்கில் கவனமாக உள்ளேன். ஸ்கேட்டிங் விளையாட்டில், உலக அளவில் சாதிக்க ஆசை. மற்றவர்கள் எனக்கு உதவ வேண்டும்’’ என்றார். இவரின் தாய் சுகந்தி, ‘‘கமலி ஸ்கேட்டிங் கற்றதை எனது பெற்றோரும் மாமல்லபுரம் மக்களும் விரும்பவில்லை. ஆனாலும் எனது ஒத்துழைப்பு மற்றும் தீவிர ஆர்வம் காரணமாக கமலி ஸ்கேட்டிங் இணைய உலகத்திற்கு வைரலாக அறிமுகம் ஆனார்.  பெற்றோருடன் வசிக்கிறேன்.

மீன் வறுவல் விற்கிறேன். வருமானம் குறைவுதான். இதில்தான் மகள், மகனை படிக்க வைக்கிறேன். கமலியை சிறந்த ஸ்கேட்டிங் வீராங்கனையாக உருவாக்க  உறுதுணையாக நான் கண்டிப்பாக அவளுடன் இருப்பேன். நிச்சயம் சாதிப்பாள். எங்கள் வாழ்க்கைப் படம், ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி’’ என்றார் கமலியின் தாயார்.  இந்தப் படம் ஆஸ்கார் விருதினை பெறும் என்று கமலியுடன் சேர்ந்த ஊர் மக்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கோமதி

Tags : Oscars ,
× RELATED 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஜான்சீனா…!