இசை வாழ்வின் என்றும் மங்காத நட்சத்திரம்

நன்றி குங்குமம் தோழி

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்

பிரபல பாலிவுட் பின்னணி பாடகியான லதாமங்கேஷ்கர் தனது 90வது அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்திய சினிமா உலகில் எல்லா பிராந்திய மொழி படங்களின் பாடல்களை பாடிக்கொண்டிருக்கும் பெருமைக்கு சொந்தக்காரர் இவர். எழுபது ஆண்டுகளாக இசை உலகில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இந்திய திரையுலகில் உள்ள ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி பிறந்தவர், இந்தாண்டு தன் 90வது பிறந்த தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

லதாமங்கேஷ்கரின் தந்தை தீனாநாத் மங்கேஷ்கர். இவர் இசை மற்றும் நாடகக் கலைஞர். தாயார் சிவந்தி. இந்த தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகள். இவர்களில் லதாதான் மூத்தவர். இவருக்கு மீனா, ஆஷா, உஷா என மூன்று சகோதரிகள். ஹிருதயநாத் என்ற தம்பியும் உள்ளார். சொந்த ஊர் கோவாவில் உள்ள மங்கேஷியை அடுத்த இந்தூர். லதா பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்தூர் தான். பூர்வீகம் மங்கேஷி என்ற ஊரின் பெயரை

தன் பெயருடன் இணைத்துக் கொண்டதால், இவரின் பெயர் லதா மங்கேஷ்கர் என்று ஆனது.

இவரின் தந்தையும் இசைக் கலைஞர் என்பதால், அவர் தான் எல்லாருக்கும் இசைப் பயிற்சி அளித்து வந்தார். லதாவிற்கு 13 வயதிருக்கும் போது அவரின் அப்பா இறந்து போக குடும்பத்தின் மொத்த பாரமும் மூத்தவரான லதாவின் மேல் விழுந்தது. வீட்டில் தலைமை வகித்தவர் இல்லாத போது, அந்த குடும்பத்தை சிறு வயதில் நடத்தி செல்ல வேண்டும் என்பது அவ்வளவு சாத்தியமில்லை. ஆனாலும் பல பிரச்னைகளை தாண்டி சமாளித்துக் கொண்டு லதா தன் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் விவரிக்க முடியாதவை.

குடும்பத்தை காப்பாற்றணும். அவரிடம் இருந்தது, இசை மட்டும் தான். அப்பா கற்றுத் தந்த இசையின் மூலமாக மும்பைக்கு சென்று குடியேறினார். அங்கு குதிரை வண்டியில் செல்லக்கூட இவரிடம் காசு இல்லாத குறை ஏற்பட்டது. அதனால் பல மைல் தூரம் நடந்தே சென்று பட வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பல நாள் போராட்டத்திற்கு பிறகு மராத்தி திரைப் படம் ஒன்றில் பாட வாய்ப்பு வந்தது. அவரின் தந்தையின் நண்பர் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. அந்த படம் வெளியாகும் தன்னுடைய குரல் எங்கும் ஒலிக்கும் என்று மிகவும் நம்பிக்கையோடு இருந்தார்.

ஆனால் அவர் பாடிய பாடல் மட்டும் வெளியாகவில்லை. மேலும் மற்ற பட நிறுவனமும் இவரை நிராகரிக்க ஆரம்பித்தது. அதனால் இந்துஸ்தானி மற்றும் உருது கற்றுக் கொண்டார். அதன் பிறகு இவரின் இசைப்பயணம் படிப்படியா தொடர ஆரம்பித்தது. இசை உலகில் இன்றும் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார் லதா மங்கேஷ்கர். ஒரு முறை இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மனுக்கும் லதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. பர்மனைப் பொறுத்தவரை லதா பாடிய பாடல் ஒன்று சரியாக வரவில்லை என்ற எண்ணம். லதாவுக்கோ அவர் பாடியதில் எந்த பிழையும் இல்லை.

இதனால் பர்மன் அவர் பாடிய பாடலை லதாவின் தங்கையான உஷாவை பாட வைத்தார்.  தங்கை பாடியது சரியாக அமையாமல் மீண்டும் லதா பாடியதுதான் திருப்தியாக இருந்ததாக எஸ்.டி.பர்மன் அவர் முதலில் பாடிய பாடலையே தேர்வு செய்தார். பிரபல பாடகர் முகமது ரஃபிக்கும் லதாவுக்கும் ராயல்டி விஷயமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் நான்கு ஆண்டு காலம் இருவரும் இணைந்து பாடாமல் இருந்தனர். அதன் பிறகு ஒரு இசை நிகழ்ச்சி மூலம் தான் இருவரும் மறுபடி இணைந்தனர்.

இவ்வாறு இசை மீது மட்டுமே கடந்த 70 ஆண்டுகளாக காதல் வயப்பட்டு இன்றும் தனக்கொரு சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார். பாரத ரத்னா, பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள லதாவிற்கு கிரிக்கெட் மற்றும் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமுண்டு. பாடகராக மட்டும் இல்லாமல் மராத்தி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவருக்கு மகாராஷ்டிரா அரசு சிறந்த இசையமைப்பாளருக்காக விருதும் வழங்கியுள்ளது.

இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் நான்கு படங்களை  தயாரித்துள்ளார். மேலும் 25 ஆயிரம் பாடல்களை பாடி கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியவர் இன்றும் ஓய்வு பெறாமல் தன் இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தொகுப்பு: ஆர்.சி.எஸ்.

Related Stories: