×

சணல் பை விற்பனையில் சபாஷ் வருமானம்!

நன்றி குங்குமம் தோழி

தொழில்முனைவோர்கள் எல்லோருக்குமே வழிகாட்டியாக ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அந்த வகையில் தனது தாயாரை ஒரு ரோல் மாடலாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு சிறிய அளவில் ஆரம்பித்த ஒரு வியாபாரத்தை இன்று கோயம்புத்தூரில் ‘ஸ்நாப் ஜூட்ஸ் (SNAP JUTES) தி யுனிக்யூ கிஃப்ட் ஷாப்’ என்ற பெயரில் ஒரு தொழிலாக மாற்றி வெற்றிகரமாக நடத்திவரும் சுஜாதா நாச்சியப்பன் சணல் பை தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த பல்வேறு விசயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘பரம்பரையாக மொத்த விநியோக வணிகம் செய்யும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஒரு தொழில்முனைவோர் ஆவேன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் சிறப்பாக அமைவதற்கு அவளது பெற்றோர் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்பதுபோல என் தொழிலுக்கு என் அம்மா லைலா பிரபாகரன்தான் ஆணிவேர். எங்களது ெசாந்த ஊர் விருதுநகர். அப்பாவும் அம்மாவும் மொத்த விநியோக வணிகம் (Wholesale Distributors) செய்வதற்காக கோவில்பட்டியில் வந்து செட்டிலாகிவிட்டார்கள்.

பள்ளிப்படிப்பை கோவில்பட்டியில் முடித்த நான் கல்லூரிப் படிப்பை சென்னையில் ஒரு பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். படிப்பு முடிந்ததும் திருமணம். எனக்கு சிறுவயதில் எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அது முடியாமல் போனதால் ஒரு எஞ்சினியருக்கே என்னை திருமணம் செய்து வைத்தார்கள். அவருக்கு திருப்பூரில் ஜவுளித்துறையில் வேலை. குழந்தைகள் பிறந்த பின்னர், நாமும் குடும்பத்திற்கு ஏதாவது வருமானம் ஈட்டலாமே என நினைத்தபோது காலை 9 மணிக்கு சென்று 5 மணிக்கு வீடு திரும்பும் வேலையில் கணவருக்கு விருப்பமில்லை.

இதற்கிடையில், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயதாகிவிட்டதால் வியாபாரத்தை நிறுத்திவிட்டனர். தம்பியோ படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டான். அதனால் அவனாலும் அவர்களின் தொழிலை எடுத்து நடத்த முடியவில்லை. இந்த நிலையில் ஓய்வுகாலத்தை பயனுள்ளதாக எப்படி செலவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சென்னை போன்ற இடங்களிலிருந்து வரும் எங்கள் உறவினர் திருமணம் நிகழ்வுகளில் சணல் பையில் தாம்பூலம் கொடுப்பதை பார்த்த அம்மா இதுபோன்று நாமும் செய்தால் என்ன என யோசித்திருக்கிறார்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா, அதுபோல அவர் உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என நினைப்பவர். அவருக்கு தையல் தொழிலும் தெரியும் என்பதால்,மதுரையில் உள்ள சிட்கோ நிறுவனத்திற்குச் சென்று தொழில் நடப்பதைப் பார்த்து வந்திருக்கிறார். பின்னர் ஒரு பெண் தையற்கலைஞரை உதவிக்கு அமர்த்தி சிறிது சிறிதாக சணல் பைகள் தைத்திருக்கிறார்.

அம்மாவின் வீட்டிற்கு சென்று வரும் நேரங்களில் அதைப் பார்ப்பேன், ‘இதை எடுத்துக்கொண்டு வந்து கோயம்புத்தூரில் விற்றால் என்ன?’ என ஒரு யோசனை தோன்றியது. முதலில் ஒரு பத்து பதினைந்து பைகளை எடுத்து வந்து நடைபயிற்சி செய்வோர்களிடம் விற்றேன். அவர்களுக்கு பிடித்திருந்ததால் அவர்கள் விரும்பும் மாடல்கள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் வசதிகளோடு வடிவமைத்து கேட்பார்கள். இதை அம்மாவிடம் தெரிவித்தபோது, அவர் அதுபோலவே செய்துகொடுத்தார். கூடுதலாக பெண் தையற்கலைஞர்களை நியமித்து அவர்களுக்கும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து எனக்கும் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சணல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலைநயத்துடனும் மிக அழகாக இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். இது பெண்களுக்கான உகந்த தொழில்’’ என்றவர் அது குறித்து விவரித்தார். ‘‘பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு பெண்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். சணல் பொருட்கள் அனைத்தும் சந்தையிலும் கிடைக்கிறது.

விற்பனையில் அதிக லாபம் பெறலாம். இருப்பினும் சணல் பொருள் தயாரிப்பு முறை பொறுத்தவரை, சணல் பை தயாரிப்பு பயிற்சி தெரிந்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்றுக் கொள்ளலாம். சணல் துணியை கொண்டு 35 வகை பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஒரு நாள் செலவு ரூ.1000. மாதம் 25 நாட்களுக்கு ரூ.25,000.

இதர செலவு ரூ.5,000 என மாத உற்பத்திக்கு ரூ.30,000 என்று சணல் பொருள் தயாரிப்பு முறைக்கு தேவைப்படும்.மாதம் ரூ.25,000 செலவில் தயாரான பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75 சதவிகித லாபத்தில் விற்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ.43,000, லாபம் ரூ.18,000. விற்பனை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷின்கள், கூலியாள் மூலம் உற்பத்தி மேற்கொண்டால் லாபம் கூடும்.

சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் அதற்கு பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் மெஷின்கள் கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. இந்த சணல் துணிகளை தைப்பது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் பழகிடும்.

சணல் துணி சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது. காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது. சணல் பை தனித்துவத்தை அறிந்து தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும்.

தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, ஃபைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை.

சணல் பொருள் தயாரிப்பு முறையில் உற்பத்திக்கு இருப்பு வைத்தல், விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை போதும். பவர் தையல் மெஷின் ரூ.10,000, கட்டிங் டேபிள் ரூ.3,000, கத்தரிக்கோல் ரூ.250, ரேக், ஹேங்கர்கள் ரூ.6,750. முதலீடு ரூ.20 ஆயிரம். வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் முதலீட்டுக்கு ரூ.10,000 போதும்.

வீட்டிலிருந்தும் விற்பனை செய்யலாம், கடை போட்டும் விற்பனை செய்யலாம், கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, ஃபைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம்.

அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஃபேன்சி கடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த ஹேண்ட் பேக் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தயாரிப்பு விலை குறைவு. ஆனால் மாத வருமானம் ரூ.50,000 வரை ஈட்டலாம்’’ என்றார் சுஜாதா நாச்சியப்பன்.

தோ.திருத்துவராஜ்

Tags : Subash ,
× RELATED விபத்தில் டிரைவர் பலி