×

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!

நன்றி குங்குமம் தோழி

வெற்றிக்கான வழிகாட்டல்

நம்மில் பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தொழில்முனைவோர் ஆகிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கான வழிமுறைகள் தெரிய வேண்டாமா? அது தெரியாமலேயே பலர் தொழிலில் இறங்கிவிடுகின்றனர்.

இருக்கின்ற வேலையையும் தொலைத்து தொழிலையும் சிறப்பாக நடத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். தொழில்முனைவோராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வழிகாட்டலே இந்த மினி தொடர்…

‘‘If you don’t build your dreams someone will hire you to help build theirs...’’கடந்த ஒரு நூற்றாண்டாக நமது சமுதாயத்தில் சொல்லி பழக்கியது என்னவென்றால் நன்றாக படிக்க வேண்டும், அதிக மதிப்பெண் வாங்க வேண்டும், நல்ல வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும்.

அரை அணா காசு வாங்கினாலும் அரசு சம்பளமாகத்தான் இருக்க வேண்டும். இது போன்ற அறிவுரைகளைதான் நாம் இன்றும் காதில் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். இரண்டு மூன்று தலைமுறையாக அதை பழகியும் இருக்கோம்.

நன்றாக படி, அறிவை வளர்த்துக்கொள்,பெரு முதலாளிகளை உற்று கவனி, நீயும் ஒரு தொழிலை தொடங்குவது எப்படி என கற்றுக்கொள், முதலீடு செய், கை நிறைய சம்பாதித்து செல்வந்தராக வாழு... என்று யாரும்  சொன்னதும் இல்லை, சொல்லிக் கேட்டதும் இல்லை. கடந்த ஒரு நூற்றாண்டாக ஒரு சில குறிப்பிட்ட தொழில்முனைவோர்களின் தலைமுறைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் தொழிலதிபர்களாக பெரும் செல்வத்தை ஈட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

குஜராத்காரர்களை எடுத்துக்கொள்ளுங்கள்... சிறு வயதில் இருந்து தொழிலை கற்றுக்கொள்கிறார்கள். சுமார் 12 - 15 வயது இருக்கும்போதே தொழில் நிர்வாகத்தில் அவர்கள் பழக்கப்படுவதும் அங்கு வாடிக்கை. அதனால்தான் அவர்களால் தொழிலை சுலபமாக கற்றுக்கொள்ள
முடிகிறது. படிக்கும்போதே தொழில் நுணுக்கங்கள் குறித்து அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். முதலீடு, ஃப்னான்ஸியல் சம்பந்தமாக பல துல்லியமான விஷயங்களை அலசி ஆராய்கிறார்கள்.

இதனால் தான் அவர்கள் தலைமுறை தலைமுறையாய் தொழிலதிபர்களாகவே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு, நம் ஊரில் நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் இருந்தால் நாம் அதை கார் வாங்கலாமா, வீடு, மனை வாங்கலாமா... அல்லது ஒரு சுற்றுலா பயணம் செல்லலாமான்னு  கையில் இருக்கும் காசை எப்படி எல்லாம் செலவு செய்யலாம் என்றுதான் யோசிப்போம். ஆனால் தொழில் செய்பவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். பத்து லட்சம் ரூபாயை எதில், எப்படி முதலீடு செய்வது, அந்த பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது... அதைக் கொண்டு தொழிலை எப்படி மேலும் விருத்தி செய்வது என்று யோசிப்பார்கள்.

கடந்த பத்தாண்டுகளாக தொழில்முனைய வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இது மிகவும் ஆரோக்கியமான சூழல்தான். இப்போதும் நம் கல்வி முறையில் எப்படி தொழில் தொடங்குவது, எப்படி முதலீடு செய்வது, எப்படி செல்வம் சம்பாதிப்பது, பெரும் செல்வந்தர்களாக உருவாக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும், எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை.

பள்ளி, கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் கூட இப்போது இருக்கும் போட்டி நிறைந்த உலகில்... வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம். இதற்கு காரணம் பள்ளி, கல்லூரிகளில் தோல்வி அடைந்தவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஆனால் வாழ்க்கை என்பது வெற்றி, தோல்விகளை உள்ளடக்கியது. பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் தோல்வியை சந்தித்தவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்தவர்களாக இருப்பதை நம்மை சுற்றி ஏராளமான பேரை பார்த்து இருப்போம்.

தோல்வியை கண்டு பழகியவர்கள், வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்விகளை கண்டு துவண்டு விழாமல், அதை எதிர்கொள்ள வேண்டும் என்ற வெறி அவர்களுக்குள் நம்பிக்கையாக, தைரியமாக மாறுகிறது. நன்றாகப் படித்தவர் நல்ல வேலைக்கு மட்டுமே செல்கிறார். கடைசி பெஞ்ச் என்று பெயர் பெற்றவர்கள் தைரியத்துடன் ரிஸ்க் எடுத்து தொழில்களை கற்றுக்கொண்டு தொழிலதிபர்களாய் மின்னுகிறார்கள்.

நமது கல்விமுறையில்  நம்முடைய மூளை கூர்மையாக்கப்படுகிறது. ஆனால், நமது வாழ்க்கை நமது இதயத்தை வலிமையாக்குகிறது. தொழில்முனைவோர் ஆவதற்கு எந்தளவிற்கு மூளை கூர்மையாக இருக்க வேண்டுமோ அதை விட உள்ளம் பன்மடங்கு வலிமையாகவும், திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் தொழில் தொடங்கும் போது எல்லாமே சாதகமாக நடந்து விடாது.

எதிர்பாராத விஷயங்கள், அசாதாரண சூழ்நிலையை கையாள வேண்டியிருக்கும். அதற்கு தகுந்தாற்போல் மனதிடமும், அனைத்து சூழ்நிலையை கையாளும் பக்குவமும் ஆரம்பித்த தொழிலை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத மன வலிமையும் அவசியம். தொழில் ெசய்ய இருப்பவர்களுக்கு ‘Never give up’ என்ற மனப்பான்மை வேண்டும்.

தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதாவது நமக்கு பிடித்த விஷயங்கள், நமக்கான ஆர்வம் எதில் உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமேநோக்கமாக இருந்தால் நீண்ட காலம் ஒரு தொழிலில் நிலைத்து நிற்க முடியாது. இந்த சமுதாயத்தில் இருக்கிற பிரச்னைகளுக்கு என்ன தீர்வை கொடுக்கப் போகிறோம்? அது பொருளாகவோ, சேவையாகவோ இருக்கலாம்.

அப்படி செய்யப்படும் தொழில்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால், சமுதாயத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் எந்த விஷயத்தை தரப்போகிறோம் என்பதை நன்கு ஆய்வு செய்து அதன் பிறகு தான் அந்த பொருள் அல்லது சேவையை தேர்வு செய்ய வேண்டும். இனி வரும் அத்தியாயத்தில் வேலையில்இருப்பதற்கும் ஒரு தொழிலை நடத்துவதற்கும் இடையில் உள்ள சாதக பாதகங்களைப் பார்ப்போம்...

Tags : Entrepreneur ,
× RELATED சன் டிவி குழும தலைவர் கலாநிதி...