திருச்சி: தமிழகத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது கும்பகோணம். இங்கு சைவ, வைணவக் கோவில்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர மகா மகம் அன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் நீராடும் மகாமக குளம் மிகவும் பிரசித்திப்பெற்றது. பல சிறப்புகளைக்கொண்ட கும்பகோணத்தைப் பற்றி இங்கே காணலாம். கும்பகோணத்திற்கு ‘குடந்தை’ என்ற பெயரும் உண்டு. குடமூக்கு என்பதன் மருவுச் சொல்லே குடந்தையாகும். குடந்தை என்ற சொல்லுக்கு ‘வளைவு’ என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி, கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய நதியாக இருப்பவை, காவிரி, கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள். இவை அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் இருப்பதாக திருநாவுக்கரசர் தன்னுடைய பாடல்மூலம் பெருமை சேர்த்துள்ளார்.இத்தலத்தில் பூஜை செய்ததால், திருமால் வைகுண்ட பேறு அடைந்தார். சிவபெருமானை அழைக்காமல், தட்சன் யாகத்திற்கு சென்றதால் தேவர்களுக்கு துன்பம் வந்து சேர்ந்தது. அந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க தேவர்கள் அனைவரும் கும்பகோணம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர். காசியைப் போலவே கும்பகோணத்திலும், எட்டுத்திசைகளில் எட்டு பைரவர்கள் காவல்புரிகின்றனர்.
இங்கு தான் ஞானம்பிகையுடனான பைரவேசர் கோவில் இருக்கிறது. கும்பகோணத்தில் பெருமையாக திகழும் மகாமகம் குளம், 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. காசியில் தீராத பாவங்கள் கூட கும்பகோணத்தில் தீரும் என்கிறது தல புராணம். மாசி மாத மகம் நட்சத்திர நாள், சித்திரைப் பிறப்பு, கார்த்திகை சோமவார நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்கள், உத்தராயனம், தட்சிணாயனம், விஷுபுன்னிய காலம், கிருஷ்ணபட்ச அஷ்டமி சிவராத்திரி, சுக்ரவாரம், கபில சஷ்டி ஆகிய நாட்களிலும் நீராடுவது மிகவும் நன்மை தரும். மாசிமக நீராடலை, ‘பிதுர் மகா ஸ்நானம்’ என்று மகாபுராண அம்மானை என்ற நூல் கூறுகிறது.
இதற்கேற்ப மாசிமகத்தன்று இறந்தவர்களுக்கு பித்ருகடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுகிறது. மகாமக குளத்தில் மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற நாளாக உள்ளது.கும்பகோணம் மகாமக குளம் கிழக்கு மேற்காக நீள்சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும் கிழக்கில் குறுகியும் மேற்கில் அகன்றும் உள்ளது. இதை மேலிருந்து பார்த்தார் குடம் போல காட்சியளிக்கும். இக்குளத்தில் நீராடினால் அமுத குளத்திலே நீராடிய நம்மை கிடைக்கும்.
