×

ZUMBA FOR STRAYS..!

நன்றி குங்குமம் தோழி

 உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு குட்பை சொல்லிவிடும். உடற்பயிற்சி என்பதைக் கடினமான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு ஜும்பா நடனம் வரப்பிரசாதமாக இருக்கிறது.

அமெரிக்காவில் அறிமுகமான இந்த ஜும்பா நடனம், உலகம் முழுவதும் இன்று பிரபலமாகி உள்ளது. லட்சத்துக்கும் மேற்பட்டோர் கற்று வரும் இந்த நடனத்தின் மூலம் உடலையும், மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். ஒருவகையான உடற்பயிற்சியாக உள்ள இந்த நடனத்தில் சால்ஸா, மாம்போ, பிளம்மிலிங்கோ, ஹிப் ஹாப், டேங்கோ, ஏரோபிக் போன்ற மேற்கத்திய பாரம்பரிய நடனங்கள், இசையை இணைத்து உற்சாகத்தோடு உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

மனதிற்கும் உடலுக்கும் ரிலாக்ஸை கொடுக்கும் இந்த நடனத்தின் மூலம் மற்றொரு ரிலாக்சை கண்டறிந்துள்ளார் டான்சர் மீனா.  “என் சொந்த ஊர் சிவகாசி. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த பின் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலைக்காக 21 வயதில் சென்னை வந்தேன். அம்மா-அப்பாவின் கைக்குள் வளர்ந்த எனக்கு சென்னை ரொம்பவே புதிதாக இருந்தது. பள்ளியில் படிப்போடு அத்தலெட்டிக்கிலும் கவனம் செலுத்தினேன். ஆனால், வீட்டிலோ ‘உன் வாழ்க்கைக்கு விளையாட்டெல்லாம் கை கொடுக்காது’ என்ற எதிர்ப்பினால் அதை கைவிட்டேன்.

செய்தித் தாள்களில் மாரத்தான் பற்றிய விளம்பரம் பார்க்கும் போது, என் சின்ன வயது கனவு கண் முன் வந்து நின்றது. மாரத்தானுக்காக என்னை தயார் செய்தேன். முதல் மாரத்தானிலேயே ஒரு மணி நேரத்தில் 10.கி.மீ. ஓடியது எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது.

இதன் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தை வீட்டில் சொல்லிப் புரிய வைத்து ஜிம்மில் சேர்ந்தேன். அங்கு ஜும்பா நடனமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஜும்பா பற்றி எந்த ஒரு அறிமுகமில்லாதவளாக கற்றுக் கொண்ட நான் இன்று பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறும் மீனா, மூன்று ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

“ஜும்பா கற்றுக் கொள்ள ஆரம்பித்த போது கடைசி வரிசையில் நின்றவள் படிப்படியாக முதல் வரிசைக்கு வந்தேன். எனது ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் ‘நீங்க ஏன் தனியா எடுக்கக் கூடாது. அந்த அளவு அர்ப்பணிப்பாகவும், ஈடுபாடாகவும் இருக்கீங்க’ என்றார். சரி, அம்மாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டதும், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை உடனடியாக அனுமதி கிடைத்து, அதற்கான நிதி உதவியும் செய்து, ‘இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நீ எனக்குத் திரும்பத் தர வேண்டாம்.

அதை நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்து’ என்ற அம்மாவின் ஆசீர்வாதம் இன்று வரை என்னை வழி நடத்திச் செல்கிறது. காலை ஆபீஸ், மாலை கிளாஸ்ன்னு என்னை நானே பிசியாக்கிக் கொண்டேன்” என்கிறார் மீனா.

“சொந்த ஊரிலிருந்து வெளியூர் வந்து வேலை செய்வது சவாலான விஷயம். அதிலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஒரு பெண்ணாக நான் வாழ்வது கூடுதல் சவால்” என்று கூறும் மீனா, தனிமையில் வாழ்ந்த அந்த நேரத்தில்தான் தனக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து, அதை அப்படியே விடாமல் களத்தில் இறங்கி செயல்படுத்தியும் வருகிறார்.

“தனிமையில் இருக்கும் நபரின் மனநிலை, உலகில் தனக்கென யாருமில்லை என்கிற எண்ணத்தில் தான் சிலரது வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை உணர்ந்து வெளியே வந்தவள் நான். தனிமை என்பது தாம் தேடிக்கொள்வது. சென்னை வந்த போது தனியாகவே உணர்ந்தேன். மற்றவர்கள் பிரச்சினைகளைப் பார்க்கும் போது அதில், என் பிரச்சினை மிகச் சிறியது என்பதை அறிந்தேன். இதனால்
என்னைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் மற்றவர்களைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தேன்.

என் வேலையை பொறுத்தவரை நேரம், காலம் கிடையாது. இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும் போது ஆள் நடமாட்டம் இருக்காது. ரொம்பவே  பயமா இருக்கும். அந்நேரம் எனக்கு உதவி செய்வது ஒரே ஒரு ஜீவன். அது என்னோட தெரு நாய். தெரு முனையிலிருந்து வீடு வரை என்னை விட்டுட்டுப் போகும்.

சில நேரங்களில் எவ்வளவு தான் கேட்டை தட்டினாலும் வாட்ச்மேன் கதவைத் திறக்க மாட்டார். அப்போது அந்த நாய் குலைக்கும் சத்தத்தில்தான் வந்து திறப்பார். எனக்கு எப்போதும் உண்மையான பாதுகாப்பாக இருக்கும் இந்த தெரு நாய்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.

கடந்த வருடம் என்னுடைய குழுவினர் ப்ளூ கிராஸ்க்கு நிதி வழங்கினர். அதே போல் நானும் எனது தனிப்பட்ட முயற்சியில் வழங்க ஆசைப்பட்டேன். இதனால் நான் கற்ற, கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜும்பாவை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்வதற்காகப் பல இடங்களில் அனுமதி கேட்டேன். நாட்களும் ஓடின. அந்த சமயம் வாய்ப்பும் கிடைத்த போது, எனது பிறந்த நாளும் நெருங்கியது. அன்று, ‘ZUMBAFORSTRAYS’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்.

மக்களிடையே வரவேற்பும் கிடைத்தது.முதல் நிகழ்வான இதில் என் நண்பர்கள் பெரிதும் உதவியாக இருந்தார்கள். வெற்றிகரமாக நடந்த இதில் கிடைத்த வருமானத்தை ப்ளூ கிராஸ்க்கு அப்படியே கொடுத்துவிட்டேன். இது தான் என்னுடைய முழு ரிலாக்ஸாக உணர்ந்தேன். இதைத் தொடர்ந்து இது போன்று பல நிகழ்வுகள் நடத்த ஆர்வமாக இருக்கிறேன்” என்றார் மீனா.

ஆனந்தி ஜெயராமன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!