நிலமே எங்கள் உரிமை…!

நன்றி குங்குமம் தோழி

உங்களிடமிருந்து  நாங்கள் எதிர்பார்ப்பது சலுகையல்ல, உரிமைகள்... ஒரு நாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதன் ஆதி மனிதர்களையும், அவர்களது பண்பாடுகள், பிரச்சினைகள் பற்றி தெரிந்து இருக்கணும். இயற்கையுடன் தொடர்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்வது வேதனையான ஒன்று. இதன் விளைவு, சமீபத்தில் உலகின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடு எரிந்து சாம்பலாகியது முதல்,  மழையினால் உருமாறி இருக்கும் கேரளா, நீலகிரி வரை ஓர் பாடம்.

நீலகிரி மாவட்டத்தில் இதற்கு முன் இது போன்று மழை பெய்ததில்லையா? இப்போது ஏன் இவ்வளவு பாதிப்பு? அங்குள்ள பழங்குடி மக்களின் நிலை என்ன?  போன்ற கேள்விகளுக்கு மாறுபட்ட கண்ணோட்டத்தில் பதில் அளிக்கிறார், பெட்டா குரும்பா எனும் பழங்குடி இனத்திலிருந்து படித்து, பட்டம் பெற்று, இன்று அம்மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலியல்வாதியான ஷோபா மதன்.

“நீலகிரி மாவட்டம்  பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள தேனம் பாடி என்னும் கிராமத்தில்  நான் வசித்து வருகிறேன். எங்களுடையது விவசாய குடும்பம். எனக்கு இரண்டு தம்பிகள். சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்த பின், ஊட்டியில் கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். சென்னையில் சோஷியல் ஒர்க் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றேன். ஒருவரிடம் கைக்கட்டி வேலை செய்ய எனக்கு மனமில்லை. அதனால் ஆதிவாசிகளுக்காக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தேன்.  

அந்தப் பயணங்களில் நிறைய கற்றுக் கொண்டேன். யாரும் இம்மக்களுக்காக வேலை செய்யவில்லை என்று தெரிந்து கொண்டேன். இவர்களை பயன்படுத்தி தங்களின் நிறுவனங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தான் அதிகம். இதில் ஒரு சிலரே விதிவிலக்கு. இதை உணர்ந்து நான் இந்த மக்களுக்காக இயங்க வேண்டுமென்று பல வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயம் Global Political Education என்ற பாடம் படிக்க பிரேசிலிலிருந்து வாய்ப்பு வந்தது. அங்கு சென்ற போது, இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க நேரம் கிடைச்சது. அது என்னை மேலும் மெருகேற்றியது’’ என்றவர் படிப்பு முடிஞ்சதும் முழுமூச்சாக பழங்குடியினர்களுக்காக இயங்க ஆரம்பித்துள்ளார்.

‘‘கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை தரத்தில் பின் தங்கியுள்ள இவர்களது நிலத்தை, தங்களது சுயலாபத்திற்காக அரசு பிடுங்கியதன் விளைவு இன்று நிலமற்றவர்களாக நிற்கின்றனர். அரசாங்கங்கள் உருவாகுவதற்கு முன்பிருந்தே பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பூர்வ குடிகளான இவர்கள் பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல்  காடுகளில்தான் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கு எல்லைகள் கிடையாது. எனக்கானது என்ற மனநிலையற்றவர்கள். கிடைப்பதை பகிர்ந்து வாழ்பவர்கள். இயற்கையை சிதைக்காத, அதனுடன் இணைந்து வாழ்க்கை முறையை பின்பற்றி வருபவர்கள். இவர்களுக்கு சாதி, மதங்கள் பாகுபாடுகளோ, உயர்வு-தாழ்வு, ஆண்-பெண் பேதங்களும் கிடையாது.

அரசாங்கம் இவர்களுக்கு வளர்ச்சி கொடுக்கிறோம், பாதுகாப்பு, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருகிறோம் என்கிறார்கள். அரசின் தலையீட்டு காரணமாக இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். காடுகளைப் பாதுகாப்பது பழங்குடிகளாக இருக்கும் காரணத்தினால்தான் அவர்கள் தொடர்ந்து சுரண்டுபட்டுக்கொண்டும், விரட்டப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய சான்று, அமேசானில் எரிந்துகொண்டிருக்கும் பழங்குடிகளுக்கு எதிரான அரசியல். எண்ணெய் வித்துகளை விதைப்பதற்கு மில்லியன் கணக்கான ஏக்கர் நிலத்தை அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கையில், அதன் பல்லுயிர்த்தன்மையை எடுத்துரைத்து சமூகப் போராட்டமும், சட்டப் போராட்டமும் நிகழ்த்தி காடுகளை காத்தவர்கள் பழங்குடி பெண்களே” என்கிறார் ஷோபா.

“இந்த தலைமுறையில் நிறையப் பேர் படித்திருக்கிறோம். அதற்கான வேலைகள் இல்லை. TNPSC, NET, SET போன்ற தேர்வும் எங்க இனத்தினர் எழுதுகின்றனர். ஆனால் எங்களுக்காக ஒதுக்கிய 1%, ST கோட்டாவையும் காசு உள்ளவர்கள் பறித்துக் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை. நீலகிரி மாவட்டத்தில் ஆலு குரும்பா என்ற இனத்தில் ஒருவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். யுனிவர்சிட்டி ஒன்றில் உதவி பேராசிரியராகச் சேர்வதற்கு லட்சக் கணக்கில் கேட்கிறார்கள். காசு கொடுத்துவிட்டால் வேலைக் கிடைத்துவிடும் என்றால், எதற்காகப் படிக்கணும். இதில் எங்கே உண்மையான வளர்ச்சி இருக்கிறது.

இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று சமீபத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு இப்படிப்பட்ட ஓர் முடிவினை எவ்வாறு எடுக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பும் ஷோபா இந்தியாவில் பழங்குடி சட்டங்களின் வரலாற்றை விவரிக்கிறார். “பழங்குடி பகுதிகளில் தங்களின் அதிகாரத்தைக் கட்டமைக்க வேண்டி 1894ஆம் ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த கொள்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. 1894ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித சட்டம் “பொதுப் பயன்பாட்டுக்கு” என்று கூறி நிலங்களைக் கையகப்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்திடம்
கொடுத்தது.

இந்தியாவின் முதல் வனச்சட்டம் 1927ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பழங்குடியினர் வனத்திற்குள் அந்நியர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டல்கள், விடுதலைக்குப் பிறகும் பின்பற்றப்பட்டது. வனத்தின் ஆக்கிரமிப்பாளர்களாக சுதந்திர நாட்டில் பழங்குடிகள் வனத்துறையினரால் அடையாளப் படுத்தப்பட்டனர். தொடர்ந்து காப்புக்காடுகள் (Reserve Forest) என்ற பெயரில் பழங்குடிகளின் நிலங்கள் வனத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. 1961 முதல் 1981 வரை 4.1 கோடி ஹெக்டேர் என்றிருந்த வனத்துறையின் காப்புக்காடுகள், 6.7 கோடி ஹெக்டேர் ஆக விரிவாக்கப்பட்டது. 1.6 கோடி நிலம் சாலைகள் அமைக்கவும், தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வன உயிர் பாதுகாப்பு சட்டத்தில், பழங்குடிகளின் உரிமை அங்கீகரிக்கப்பட்டு, வனத்தில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் அவர்களுக்கு அளிக்கப்படாமல் வன சரணாலயம் அமைப்பதில்லை என்றும், பழங்குடிகளும் வன விலங்குகளும் இணைந்து வாழும் நிலையை உருவாக்குவது என கூறியது. 2006 ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமையை அங்கீகரித்தது. பழங்குடி மக்களின் சம்மதமின்றி புதிய சரணாலயங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது எனத் தெளிவுபடுத்தியது. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி.

பழங்குடிகளின் வாழ்வாதாரம் காட்டை சார்ந்தது. இலவசமாக ரேசன் அரிசி தரப்படுகின்றன. அவர்களுக்கு  பழக்கப்படாத உணவுகள் பழக்கப்படுத்தப்படுகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நகருக்குக் குடிபெயர வைக்கின்றனர். அரசின் திட்டங்களாக இருந்தாலும் இது அவர்களுக்கு எதிரானதாகவே உள்ளது” என்று கூறும் ஷோபா, இந்த வன உரிமைச் சட்டங்கள் பற்றி புத்தகங்கள், பாடல்கள் மூலம் பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
 
‘‘தற்போது பெய்துள்ள மழை இதற்கு முன்பும் பெய்திருக்கிறது. அந்த நேரத்திலும் நிலச் சரிவுகள் உருவாகியிருக்கின்றன. ஆனால், இவ்வளவு பாதிப்புகள் இல்லை. இவை எல்லாம் மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை. நிலமும் ஓர் உடல். அதில் சின்ன கீறல் ஏற்பட்டாலும் அதற்கான விளைவினை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருந்த மழைக்காடுகள், சோலைக்காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு அங்கே எல்லாம் தோட்டப்பயிர்கள் பெருகிவிட்டன. நீரைத்தேக்கும் பள்ளத்தாக்குகள் நீர்மின் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. சுற்றுலாவின் முக்கியத்துவத்தால் காடுகளைக் காக்கும் பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர்.

ஊடகங்களின் வெளிச்சம் பட்ட பகுதிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பழங்குடியினர் குடியிருப்புகள் எல்லாம் முழுமையாகக் கைவிடப்பட்டிருக்கிறது. அவர்கள் காட்டில் கட்டி வாழ்ந்த வீடுகள், குகைகள் கூட மழைக் காலத்தில் சேதமாகாது. ஆனால் அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகள் எதுவுமே அவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. இதுதான் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் வளர்ச்சி” என்று ஆக்ரோஷமாகக் கூறும் ஷோபா,  பல்வேறு மிரட்டல்களுக்கும் ஆளாகியுள்ளார். “எல்லோருக்காக இல்லாவிட்டாலும் எங்கள் ஊர் மக்களுக்காகக் கேட்கும் போது அரசு அதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

நீங்கள் மட்டும் எப்படி பயன் அடையலாம். இந்த மக்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதல்லவா? இதைக் கேட்டா மாவோயிஸ்ட், தீவிரவாதி, கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இயற்கையில் அழிவு வருவதுதான் இயற்கை. இது ஒரு சுழற்சி. சமீபத்திய மழையில் நீலகிரி மாவட்டம் பெரிதாகப் பாதித்துள்ளது. கட்டிடங்கள் அதிகமாகியிருக்கிறது. அதுவும் ஒரு காரணம். அதனால் தான் இவர்கள் புகார் கொடுக்கிறார்கள். அந்த புகார் யாரிடம் சொல்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இயற்கையை பற்றித் தெரிந்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்’’ என்றார்.
மண்ணை விட்டு விரட்டப்படும் மனிதனுடன் கலாச்சாரத்தின் வேர்களும் பிடுங்கப்படுகின்றது.

ஆயிரமாயிரம் ஆண்டுக்கால பழங்குடி மொழியும் நாள்தோறும் அதனைப் பேசி மறைந்த மனிதனின் புதை குழியில் சமாதி செய்யப்படுகின்றது. அவர்களும் அருகி வரும் ஓர் உயிரினம் என்பதை உலகு அறியத் தயாராக இல்லை. பழங்குடி மக்கள் நமது ஆள்பவர்களிடம் எதிர்பார்த்து நிற்பது சலுகையல்ல, உரிமைகள். அவர்கள் கண்ணியத்தோடும் மனித உரிமைகளோடும் வாழ உரிமையுள்ளவர்கள். அதை அங்கீகரிக்கும் சமூகமே தன்னைத்தானே ஜனநாயக சமூகமாக உயிர்ப்பித்துக் கொள்கிறது.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : land ,
× RELATED நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த...